வடமாகாண விவசாயக் கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை(19) யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வருகை தரவில்லை.
முதலமைச்சருக்குப் பதிலாக வடமாகாணக் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு முற்பகல்-09.30 மணியளவில் கண்காட்சியைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
வடமாகாண முதலமைச்சரின் செய்தியினை வடமாகாணக் கல்வியமைச்சர் வாசித்தார்.
"காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சந்தையை நோக்கிய நிலைபேறான விவசாயம்" எனும் தொனிப் பொருளில் ஆரம்பாகியுள்ள குறித்த கண்காட்சி எதிர்வரும்-23 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நான்கு தினங்கள் காலை-09 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை இடம்பெறவுள்ளது.
குறித்த கண்காட்சியில் மத்திய விவசாயத் திணைக்களத்தின் பிரிவுகள், வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு திணைக்களங்கள், விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இயற்கை விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
கண்காட்சியின் ஆரம்பநாளான இன்று வடமாகாணத்தின் பல்வேறிடங்களிருந்தும் பெருமளவா ன பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment