//]]>

Sunday, September 17, 2017

மூன்று வாரங்களுக்குள் தீர்வு!- மயானங்களை அகற்றக் கோரிப் போராடும் மக்களிடம் வடக்கு முதல்வர் உறுதி (Photos)


மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றக் கோரி  தொடர் கவனயீர்ப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாழ். புத்தூர் கலைமதி கிராம மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை(17) நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.  

கடந்த 67 நாட்களுக்கு மேலாக 'மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் காணப்படும் மயானங்களை அகற்றி மக்களின் வாழ்விடச் சூழலைப் பாதுகாத்து, கிராமியக் கட்டமைப்பை வலுப்படுத்து' என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக  நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் புத்தூர் கலைமதி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்  நிலையில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சைத் தன்வசம் வைத்திருக்கின்ற  வடமாகாண முதலமைச்சர் தம்மை நேரில் சந்தித்துத் தமது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வந்தனர். 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் கோரிக்கையை ஏற்று  போராட்டத்தின் 68 ஆவது நாளான இன்று முற்பகல்-10 மணியளவில் புத்தூர் கலைமதி கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அங்கு மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மாயணத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் மேற்கொண்டு வரும் பகுதிக்குச் சென்ற வடமாகாண முதலமைச்சர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். 

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் உணர்வுகளை மதிப்பதாகத் தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் குறித்த பகுதியில் அமைந்திருக்கும் மயானம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளமையால் தாம் அரசியல் சார்ந்த முடிவுகளை உடனடியாக எடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் தீர்வினை முன்வைப்பதாக உறுதியளித்துள்ளார். 

வடமாகாண முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றுகூடியிருந்ததுடன் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment