//]]>

Wednesday, September 20, 2017

தியாக தீபம் திலீபனை நினைந்துருகி தாயகத்தில் உணவு தவிர்ப்பு


அமைதிப்படை என்ற பெயரில் தமிழீழத்துக்குள் புகுந்து இந்திய பாசிசப்படைகள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய அட்டூழியங்களை அம்பலப்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அன்றைய யாழ். மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராகவிருந்த திலீபன் அவர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி, ஐந்து அகிம்சைக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் பன்னிரண்டு நாட்கள் வரை குடிநீர் கூட அருந்தாமல் நீடித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தின் முடிவில் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி லெப்.கேணல் திலீபன் அவர்கள் தனது உயிரை ஈகம் செய்திருந்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை தாயகத்தில் மக்கள் எழுச்சி கொண்டு தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை குறித்த 12 நாட்களும் உணர்வுபூர்வமாக அனுஸ்டித்து வருகின்றனர்.

இம்முறை தியாக தீபத்தின் 30ம் வருட நினைவேந்தல் நிகழ்வின் கடைசி இரண்டு நாட்களும் முழுநேர உணவு தவிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக, வவுனியாவில் இன்றுடன் (20.09.2017 புதன்கிழமை) 209 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

சிறீலங்கா அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதப்படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நடந்தது என்ன? என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்தி பொறுப்புக்கூறுமாறு வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் தாயகத்தின் கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமது போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் திங்கள் கிழமை (215ம் நாள்) மற்றும் செவ்வாய் கிழமை (216ம் நாள்) ஆகிய இரண்டு நாட்களும் முழுநேர உணவு தவிர்ப்பில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை தெரிவித்தார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment