தமது வழக்குகளைத் தொடர்ந்தும் வவுனியாவிலேயே நடாத்த வேண்டுமென வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை(13) வடமாகாணம் தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
20 வரையான தமிழ்க் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் இணைந்து கடந்த செவ்வாய்க்கிழமை(10) பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுத்திருந்தது. இதற்கமைவாக குறித்த ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டது.
பூரண ஹர்த்தால் காரணமாக யாழ் . மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் அன்றாடச் செயற்பாடுகள் நேற்றுக் காலை முதல் மாலை வரை முற்றுமுழுதாக முடங்கியது. அரச, தனியார் பேருந்துகள் முழுமையாகச் சேவையில் ஈடுபடவில்லை. இதன் காரணமாக எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும் யாழ். நகரிலுள்ள மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனை அண்டியுள்ள தனியார் பேருந்துத் தரிப்பிடம் என்பன வெறிச் சோடிக் காணப்பட்டன. அரச, தனியார் பேருந்துகள் சேவைகளில் ஈடுபடுத்தப்படாததன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உட்பட யாழ்.குடாநாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளுக்கும் சிகிச்சை பெறச் சென்ற நோயாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
யாழ். நகரத்தில் அமைந்துள்ள சில உணவகங்கள் மற்றும் மருந்தகங்களைத் தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
யாழ்.குடாநாட்டின் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லாமையால் பாடசாலைகளும் இயங்கவில்லை. அத்துடன் அரச, தனியார் வங்கிகள், சிகை ஒப்பனையாளர் நிலையங்கள், மதுபான நிலையங்கள், அரச, தனியார் நிறுவனங்கள் என்பன இயங்கவில்லை.
யாழ். குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தையான திருநெல்வேலி பொதுச் சந்தை உட்பட அனைத்துப் பொதுச் சந்தைகளும் ஹர்த்தால் காரணமாகச் சோபை இழந்து காணப்பட்டது. அத்துடன், வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டமும் வெகுவாகக் குறைவடைந்து காணப்பட்டது. மொத்தத்தில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக விடுக்கப்பட்ட ஹர்த்தால் அழைப்பை ஏற்று நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி வெற்றிகரமாக நடந்தேறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment