//]]>

Wednesday, October 11, 2017

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிரொலித்த வடக்கு- கிழக்கு இணைப்பு விவகாரம்


புதிய அரசியலமைப்பின் இடைக்கால வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல்  இன்று புதன்கிழமை(11) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. 

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான கலாநிதி- கே.ரி. கணேசலிங்கம், சட்டத்துறைத் தலைவர் கலாநிதி- குமாரவடிவேல் குருபரன், விரிவுரையாளர் கலாநிதி- சிவசுப்பிரமணியம் ரகுராம் ஆகியோர் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றினர். 

அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்ட இளைஞரொருவர் வடக்கு- கிழக்குப்  பிரிந்திருப்பதே சிறந்தது எனக் கருத்துத் தெரிவித்தார். 

இதனையடுத்து வடக்கு- கிழக்கு இணைப்பின் அவசியம் குறித்து நிகழ்வின் பேச்சாளர்கள் விளக்கமளித்தனர். 

சட்டத்துறைத் தலைவர் கலாநிதி- குமாரவடிவேல் குருபரன் கருத்துத் தெரிவிக்கையில், 

வடக்கு மாகாண மக்கள் வடக்கு- கிழக்கு இணைப்பை சாதாரண உணர்வு ரீதியான சிந்தனையில் அணுகுகிறார்கள். ஆனால், கிழக்கு மாகாண மக்கள் தாங்கள் கிழக்கு மாகாணத்தில் நிலைத்து வாழக் கூடிய அடிப்படை குறித்தே சிந்திக்கிறார்கள். 

நிலத் தொடர்புள்ள சுயாட்சி அலகுள்ள ஒரு பகுதியாக காணப்படக் கூடாது என்பதற்காகவே வடக்கு கிழக்கு இணைப்புக்கெதிராகப் பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.  

ஒரு மக்கள் கூட்டம் தங்களுக்குரிய நிலப் பரப்பிலே தாங்களே தங்களுக்கான உரிமைகளைத் தீர்மானிக்கும் வகையில் ஒரு நிலப்பரப்பை அடையாளப்படுத்துகிறார்கள். அந்த வகையில் தான் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு அமைந்துள்ளது. 

நிலத் தொடர்புள்ள வடக்கு- கிழக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.  இவ்வாறு அரசாங்கம் செயற்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. 

வடக்கு- கிழக்கில் வாழும் மக்கள் பன்மைத் தன்மை கொண்டவர்கள். அவர்கள் சேர்ந்து வாழ முதலில் பழகிக் கொள்ள வாய்ப்பை வழங்குங்கள். வாங்க பழகிப் பார்க்கலாம்...அதன் பின்னர் வடக்கு- கிழக்கு இணைப்பைப் பற்றி அரசாங்கம் இறுதி முடிவெடுக்க வேண்டும். 

தமிழ்மக்கள் மத்தியில் முஸ்லீம் மக்களுக்கெதிரான மன நிலை அதிகரித்து வருகிறது.  எதிர்கால வடக்கு கிழக்கில் தங்களது உரிமைகள் பாதுகாக்கப்படும், தங்களுக்கான சுயாட்சி ஏற்பாடுகள் காணப்படும் போன்ற விடயங்களை நாங்கள் முஸ்லீம் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.  சமூகமாக உங்களுடைய கூட்டு எதிர்காலம் இணைந்த வடக்கு- கிழக்கில் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான சூழலில் தான் வடக்கு- கிழக்கு இணைப்புச் சாத்தியப்படும். 

வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது ஒரு மக்கள் கூட்டம் தங்களுடைய ஆட்புலத்தை அடையாளப்படுத்துவது ஆகும். அந்த ஆட்புலத்தை அடையாளப்படுத்துவதற்கான காரணம் வரலாறு மாத்திரமல்ல எங்களுடைய அரசியல் ரீதியான எதிர்காலத்திலும் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணியாகவுள்ளது என்றார்.

விரிவுரையாளர் கலாநிதி- சிவசுப்பிரமணியம் ரகுராம் கருத்துத் தெரிவிக்கையில், 

எங்களுடைய அரசியல் கட்டுமானமே வடக்கு, கிழக்கு இணைப்பிலேயே  தங்கியுள்ளது. தமிழர் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் வடக்கு-  கிழக்கு இணைப்பில் நாங்கள் உறுதியாகவிருக்க வேண்டும். 

வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது தமிழ் மக்களின் பல்வேறு விடயங்களை உறுதிப்படுத்தக் கூடியதொரு முக்கியமான விடயம். வடக்கு- கிழக்குப்  பிரிந்திருக்க வேண்டும் சிந்திப்பது எங்களுடைய எதிர்காலத்திற்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார். 

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்கினேஸ்வரன்,  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச அமைப்பாளரும், ஓய்வு நிலை அதிபருமான க. அருந்தவபாலன், பேராசிரியர் சி. க. சிற்றம்பலம் உட்பட மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஆர்வலர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment