ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசை விழா நேற்று வெள்ளிக்கிழமை(08) காலை யாழ். நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் எழுச்சியுடன் ஆரம்பமாகியது.
இந்து மத அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம் ஆகியன இணைந்து குறித்த விழாவை ஏற்பாடு செய்துள்ளன.
இந்து மத அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானம் ஆகியன இணைந்து குறித்த விழாவை ஏற்பாடு செய்துள்ளன.
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற தொடக்க வைபவத்தில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன் கெளரவ அதிதியாகவும், நன்னடத்தைச் சிறுவர் பராமரிப்புத் திணைக்கள ஆணையாளர் தி. விஸ்வரூபன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சைவத்தமிழர்களின் உன்னத அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் நந்திக் கொடியை வடமாகாண முதலமைச்சர் சம்பிராயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது திருமுறைப் பாராயணம், துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகளின் கூட்டுப் பிரார்த்தனை என்பன இடம்பெற்றதுடன் "சைவத்தமிழர்களின் கலங்கரை விளக்கம்" நூல் வெளியீடும் நடைபெற்றது. நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குறித்த நூலை வெளியிட்டு வைக்க வடமாகாண முதலமைச்சர் நூலின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
நூல் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. நூல் அறிமுகவுரையைச் சைவ வித்தியா விருத்திச் சங்கச் செயலாளர் தி. செல்வமனோகரன் நிகழ்த்தினார்.
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இளைப்பாறிய விரிவுரையாளர் கலாநிதி செ. திருநாவுக்கரசு "நாவலர் பெருமானால் காக்கப்பட்ட சுதேசிய சைவத்தமிழ்ப் பண்பாடு" எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
ஆரம்ப வைபவத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன், இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சித்தானந்தன், கவிமணி க. ஆனந்தராஜா(அன்னைதாசன்) உள்ளிட்ட பெரியோர்கள், மாணவர்கள், இந்து கலாசார உத்தியோகத்தர்கள், பெண்கள், சைவத்தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மற்றும் குருபூசையை முன்னிட்டு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பின் வீதி விழாக் கோலம் பூண்டுள்ளது.
0 comments:
Post a Comment