//]]>

Saturday, December 2, 2017

எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் மாத்திரமே தமிழ்மக்கள் பேரவையுடன் இணைந்து உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவோம்(Photo)



தமிழ்மக்கள் பேரவை நாங்கள் முன்வைக்கும் கொள்கைகளையும், கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் தமிழ்மக்கள் பேரவையுடன் இணைந்து போட்டியிடுவோம். அல்லாவிடில், தமிழ்ச் சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற இலக்குகளோடு முன்வரும் கட்சிகளையும், பொது அமைப்புக்களையும் ஒன்றிணைத்துப் பொதுச் சின்னம் ஒன்றின் கீழ் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவோம்.  அந்தப் பொதுச் சின்னம் ஏற்கனவே எங்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவோ அல்லது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சின்னமாகவோ காணப்படலாம் எனத் தமிழர் சமவுரிமை அமைப்புத் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மேற்படி அமைப்பின் பொதுச் செயலாளர் தாயுமானவர் நிகேதன், யாழ். தேர்தல் மாவட்டத்தின் பிரதிநிதி கந்தையா இரட்ணகுமார் ஆகியோர் இணைந்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை(02) பிற்பகல் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

 இது தொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தோம். இந்த நிலையில் எங்கள் பிரதேச அபிவிருத்தியை எவ்வாறு மேற்கொள்ளலாம்  என பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தமிழ்மக்கள் பேரவை அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் வகையிலும், தற்போது ஒன்றிணைத்துள்ள அமைப்புக்களின் ஒருமித்த நோக்கங்களை வெற்றி கொள்ளும் வகையிலும் தமிழர் சமவுரிமை அமைப்பை உருவாக்கியுள்ளோம். தற்போது 18 அமைப்புக்கள் தமிழர் சமவுரிமை அமைப்புடன் ஒன்றிணைந்துள்ளன.

ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் சமமாகக் கிடைப்பதற்கும்,வளங்களுடாகப் பெறுகின்ற பயன்கள் மூலம் உச்ச அடைவை எட்டுவதற்கும் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழர் சமஉரிமை அமைப்புச் சார்பாக வேட்பாளர்களை முன்னிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். 

பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள் தங்களுக்கென வகுக்கப்பட்ட நியமங்களின் அடிப்படையில் சரியாகச் செயற்படுகின்ற போது கிராம மட்ட அபிவிருத்திகள் நிறைவாக ஏற்படும். எங்களுடைய பண்பாடு, கலாசாரம் என்பன பேணிப் பாதுகாக்கப்படும். உள்ளூர் விவசாய உற்பத்திகளுக்கு நிறைவான சந்தை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படுவதுடன், சிறப்பான கழிவு முகாமைத்துவத்தையும் முன்னெடுக்க முடியும். எனவே, உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நாம் உரிய வகையில் பயன்படுத்தும் போது எங்கள் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திகளை ஏற்படுத்த முடியும். 

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தனித்துவமாகப் போட்டியிடவிருந்த ஆறு அமைப்புக்களையும், கிழக்கு மாகாணத்திலும் சுயேட்சையாகப் போட்டியிடவிருந்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பத்து அமைப்புக்கள் எங்கள் அமைப்புடன் ஒன்றிணைந்துள்ளன. அது மாத்திரமன்றி, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் போட்டியிடவிருந்த பல்வேறு சுயேட்சைக் குழுக்களுடனும், அமைப்புக்களுடனும் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறோம் எனவும் தெரிவித்தனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment