குறித்த விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பார்வையிட பாஸ் நடைமுறை அமுலிலிருந்து வருகிறது.
இதுவரை காலமும் குறித்த விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரில் ஒருவரைப் பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் பாஸின் அடிப்படையில் பார்வையாளர் நேரத்தில் அவர் சார்ந்த உறவினர்களுக்கு ஒருவர் பின் ஒருவராகச் சென்று பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையி ல் கடந்த திங்கட்கிழமை குறித்த விடுதியில் மாலை நேரப் பார்வையாளர் நேரத்தின் போது ஒரு பாஸில் உறவினர்களில் ஒருவர் மாத்திரமே குறித்த விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுபவரைப் பார்வையிட முடியுமென வைத்தியசாலை நிர்வாகத்தால் திடீர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
முன்னறிவித்தலின்றித் இவ்வாறான கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டமையால் குறித்த விடுதிகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரைப் பார்வையிடுவதற்குத் தூரவிடங்களிலிருந்து வருகை தந்தோர் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். இதனால், வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்குமிடையே கடும் வாக்குவாதமும் மூண்டுள்ளது. சம்பவம் தொடரில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. முன்னறிவித்தலி ன்றிக் குறித்த நடைமுறையை அமுலுக்குக் கொண்டு வந்தமை தொடர்பிலும் இதன் போது விசனம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து வைத்தியசாலைப் பணிப்பாளரின் துரித நடவடிக்கையால் பாஸ் நடைமுறைக்கமைவாக அங்கு சென்றிருந்த உறவினர்களைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், வைத்தியசாலையின் மகப்பேறு விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரில் ஒருவரைக் காலை, மாலை மற்றும் மதிய வேளை பார்வையாளர் நேரங்களில் ஒரு வேளைப் பார்வையாளர் நேரத்தில் ஒரு பாஸில் ஒருவரே பார்வையிடும் நடைமுறை தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை காலமாகையால் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ள காரணத்தாலேயே இந்த நடைமுறை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்திய சாலையின் நிர்வாக அதிகாரியொருவர் தெரிவித்தார். ஆகவே, இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment