ஆயுதப் போராட்டம் தமிழ்மக்களின் விடுதலைக்காக ஆயிரக் கணக்கான ஆண், பெண் போராளிகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த உன்னதமானதொரு போராட்டம். அவ்வாறானதொரு போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதற்கு கொழும்பில் பிறந்து வளர்ந்த சுமந்திரனுக்கு எவ்வாறான உரித்துக்களும் கிடையாது. ஆயுதப் போராட்டம் என்பது அசிங்கமான விடயமல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குச் சாட்டையடி கொடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சிரேஷ்ட ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஈழ விடுதலைப் புலிகளுக்குப் பயிற்சி வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் சம்பந்தனும் ஒருவர். ஆகவே, தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தவர்களில் தமிழரசுக் கட்சியின் தலைவர்களுக்குப் பாரிய பங்கிருக்கிறது.
இந்நிலையில் தற்போது நாம் ஒரு அகிம்சை கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், எங்களுக்கும் ஆயுதப் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை எனக் கூறுவதும் பொய்யானதும், நாகரீகமற்றதுமான கருத்து.
இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் இடையில் அரசியலுக்கு வந்தவர்களுக்கு எங்கள் வலிகளும் தெரியாது. எங்கள் அர்ப்பணிப்பான தியாகங்கள் தொடர்பிலும் புரிந்து கொள்ள முடியாது.
இந்நிலையில் சுமந்திரன் இன்னொரு கிரகத்திலிருந்து வந்தவர் போன்று தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சிப்பதாகவே எண்ண வேண்டியுள்ளது.
ஈழத் தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டமே தமிழர்களைச் சர்வதேசவளவில் அறியக் கூடியதொரு நிலைமையை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் தமிழ்மக்கள் தொடர்பில் பேசக் கூடிய நிலைமையைப் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் உயிரிழப்புக்களே தோற்றுவித்தது
ஆகவே, இன்னொரு தடவை போராளிகளைக் கொச்சைப்படுத்தும், மலினப்படுத்தும் கருத்துக்கள் தெரிவிப்பதைச் சுமந்திரன் இத்துடன் நிறுத்திக் கொள்வதுடன் தமிழ்மக்களுக்கு உருப்படியாவது எதையாவது செய்ய வேண்டும். அல்லாவிடில் அவர் அரசியலிலிருந்து விலகி நிற்பதே தமிழ்மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவையாக அமையும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment