இதன் போது மகாகவி பாரதியாரின் பிறந்ததினத்தை முன்னிட்டுப் பல்வேறு விசேட நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பாரதியார் இயற்றிய பல புகழ்மிக்க பாடல்களை மாணவியொருவர் பக்க வாத்திய சகிதம் வீணையில் மிகவும் இனிமையாக இசை மீட்டிப் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
அந்த வகையில் சிந்து நதியின் மிசை நிலவினிலே....சேர நன்னாட்டிளம் பெண்களுடனே....என்று தொடங்கும் பாடலை அப்படியே தனக்குள் உள்வாங்கிய குறித்த மாணவி அப்பாடலை வீணையில் தனது கைவிரல்களால் தத்ரூபமாக இசை மீட்டினார்.
மகாகவி பாரதியார் பாடிய பல பாடல்களைக் குறித்த மாணவி வீணையில் இசைமீட்டியிருந்த போதும் அந்தப் பாடல் சபையில் கூடியிருந்த பலரையும் மெய்மறக்க வைத்தது.
குறித்த பாடல் பாடி முடிவடைந்து பாரதியார் பாடிய இன்னொரு பாடலையும் மாணவி வீணையில் இசை மீட்டி முடித்த பின்னர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சித்தானந்தன் எழுந்து நின்று "சிந்து நதியின் மிசை நிலவினிலே...." என்று தொடங்கும் பாடலை நீங்கள் வீணையில் மீட்டிய விதம் சிறப்பாகவுள்ளது. இங்கு கூடியுள்ள அனைவருக்காகவும் அந்தப் பாடலை மீண்டும் இசைமீட்டுமாறு அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளை ஏற்று மீண்டும் குறித்த பாடலை மாணவி வீணையில் அழகுற இசை மீட்டினார். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனும் அந்தப் பாடலை மிகவும் இரசித்துக் கேட்டுக் கொண்டிருநதார். பாடல் நிறைவுற்ற பின்னர் மாணவியின் திறமையைப் பாராட்டிச் சபையில் பலத்த கைதட்டல் ஒலி எழுந்தது.
வடமாகாண முதலமைச்சர் மற்றும் குறித்த பாடலை மீண்டும் வீணையில் இசைமீட்டுமாறு வேண்டுகோள் விடுத்த இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் ஆகியோரும் சபையினருடன் இணைந்து கரகோசம் செய்தனர்.
அதன் பின்னர் நிகழ்வின் முதல் வரிசையில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜனுக்கு அருகில் அமர்ந்திருந்த வடமாகாண முதலமைச்சர் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவரை நோக்கி இந்தப் பாடலில் தானே "சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்...." என்ற வரி உள்ளது. என்று கூற அதற்கு இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் ஆமாம்....எனக் கூறினார். வடமாகாண முதலமைச்சர் அதனைக் கேட்டுச் சிரித்தார்.
0 comments:
Post a Comment