எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து குறைந்தளவிலான விண்ணப்பங்களே கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 601,000 அரச பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில் 41,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தவறான முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தமையால் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. சில விண்ணப்பங்கள் தாமதமாகக் கிடைத்ததாலும் நிராகரிக்கப்பட்டன.560,120 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
குருநாகல மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 67,411 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. கண்டி மாவட்டத்திலிருந்து 48,353 விண்ணப்பங்களும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 45,261 விண்ணப்பங்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 41,049 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.
தபால்மூல வாக்களிப்புக்கான குறைந்தபட்ச விண்ணப்பங்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1,558 விண்ணப்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 2,208 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment