//]]>

Monday, January 1, 2018

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் தொடர்பில் சரவணபவன் எம்.பியின் பரபரப்புக் கருத்து

எத்தனையோ ஜனநாயகக் கட்சிகள் இந்த மண்ணில் காணப்பட்டாலும் தமிழ்மக்கள் எப்போதும் தமிழரசுக் கட்சியுடன் தான் நிற்கிறார்கள். கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் எங்களுக்கெதிராகப் பரப்புரைகள் பரப்பினார்கள். ஆனாலும், என்ன நடந்தது?எங்களுடைய மக்கள் களநிலைமையைச் சரியாக உணர்ந்தும் புரிந்தும் வைத்துள்ளார்கள். தமிழரசுக் கட்சி மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தமிழரசுக் கட்சியைச் சுற்றி நிற்கிற கொடிகள் தான் புளொட் உள்ளிட்ட பங்காளிக்கட்சிகள். தமிழரசுக் கட்சி இல்லையென்றால் கொடி சுற்றாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் இவ்வாரத் தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கியுள்ள விசேட செவ்வியில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில்  புளொட் அதிக விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைமை சரியான நடவடிக்கை எடுக்காவிடில் எதிர்காலத்தில் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான உறவில் நிச்சயம் விரிசலை ஏற்படுத்தும் எனப் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நீங்கள் கூற விரும்புவது என்ன?  என சுயாதீன ஊடகவியலாளரால் தொடுக்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் அவர் இவ்வாறான கருத்தைத் தெரிவித்திருந்தாலும் எங்களுடைய வரலாறை நீங்கள் எடுத்து நோக்கினால் எத்தனையோ ஜனநாயகக் கட்சிகள் இந்த மண்ணில் காணப்பட்டாலும் தமிழ்மக்கள் எப்போதும் தமிழரசுக் கட்சியுடன் தான் நிற்கிறார்கள். 

கடந்த காலங்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் எங்களுக்கெதிராகப் பரப்புரைகள் பரப்பினார்கள். ஆனாலும், என்ன நடந்தது? எங்களுடைய மக்கள் களநிலைமையைச் சரியாக உணர்ந்தும் புரிந்தும் வைத்துள்ளார்கள். தமிழரசுக் கட்சி மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

நான் உண்மையான கள யதார்த்தத்தைத் தற்போது வெளியிட்டால் பிரச்சினை உருவாகும். ஆனாலும், உங்களுடைய கேள்விக்குச் சரியான பதிலளிப்பதாயின் தமிழரசுக் கட்சியைச் சுற்றி நிற்கிற கொடிகள் தான் புளொட் உள்ளிட்ட பங்காளிக்கட்சிகள். தமிழரசுக் கட்சி இல்லையென்றால் கொடி சுற்றாது. இதற்கு மேலும் இந்தக் கேள்விக்கான பதிலாக நான் எதனையும் கூற விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி:- (தினகரன் வாரமஞ்சரி- 31.12.2017)
(நேர்காணல்:- செல்வநாயகம் ரவிசாந்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment