//]]>

Wednesday, January 3, 2018

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துச் சபை ஊழியர்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள்(Video)

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் போக்குவரத்துத் துறை சார்ந்த தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து வடமாகாணத்திலுள்ள ஏழு சாலைகளினதும் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து புதுவருட தினமான நேற்று முன்தினம்(01) முதல் காலவரையற்ற பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்நிலையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் மூன்று முக்கிய கோரிக்கைகளை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் பகிஷ்கரிப்புப் போராட்டம் வாபஸ் பெறப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

தாம் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(02) முற்பகல் கோண்டாவிலுள்ள யாழ். சாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர்,  முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய சாலைகளின் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்கள் தெரிவித்தனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதேஅவர்கள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் எங்களுக்கென நிரந்தரமானதொரு பகுதி பிரித்துத் தரப்பட  வேண்டும்,  அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே தடுப்புப் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் நாங்கள் தொடர்ந்தும் சேவையாற்ற வேண்டுமானால் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு இரு நிர்வாகங்கள் நடைபெற வேண்டும்.

குறிப்பாகத் தனியார் பேருந்துக் குழுவினர் தங்களுடைய நிர்வாகத்தை நடாத்துவதற்கும் , இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் மற்றும் நேரக்கணிப்பாளர்கள் தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் நடுபாதைத் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு எங்களிடம் கையளிக்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் நிரந்தரமாக எழுத்துமூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் ஆகிய எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment