//]]>

Wednesday, January 3, 2018

வடக்கில் போக்குவரத்துச் சபை பேருந்து சேவைகள் இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை!(Photo)


வடமாகாண முதலமைச்சரின் போக்குவரத்துத் துறை சார்ந்த தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து வடமாகாணத்திலுள்ள ஏழு சாலைகளினதும் முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்து புதுவருட தினமான நேற்று முன்தினம் திங்கட்கிழமை(01) முதல் வடமாகாணம் தழுவிய தொடர் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்துகளின் சேவைகள் கடந்த மூன்று தினங்களாக முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்நிலையில் வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமை அலுவலகத்திலிருந்து வருகை தந்த விசேட குழுவினர், வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ். கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில்  இன்றைய தினம்(03) காலை சந்தித்து விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத் தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது வவுனியா புதிய பேருந்து நிலையம் தொடர்பாக நாம் முன்வைத்துள்ள மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ள போதும் இது தொடர்பில் தமக்கு நேரடி உறுதிமொழிகள் வழங்கப்படும் வரை தமது போராட்டம்
தொடருமென இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் அருளானந்தம் அருள்பிரகாஸ் சற்று முன்னர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment