ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஜனவரி -09 ஆம் திகதி முதல் ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியுமென சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தற்போதுள்ள திருத்தத்திற்கு அமையவா? அல்லது முன்னரான அரசியலமைப்பின் பிரகாரத்தின் அடிப்படையிலானதா? எனும் விடயத்தை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் கருத்துக் கோரியிருந்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும்-2020 ஆம் அண்டுடன் நிறைவடைகின்றதா? அல்லது 2021ஆம் ஆண்டு வரை அவர் பதவியில் தொடர முடியுமா என்பது தொடர்பாக விவாதிக்க இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று வியாழக்கிழமை(11)காலை நடைபெற்றது.
இதன் போது சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரியவினால் முன்வைக்கப்படட வாதத்திலேயே 2015 ஜனவரி-09 ஆம் திகதி முதல் மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகளுக்கு அதிபராகப் பதவி வகிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆறு ஆண்டுகள் பதவி வகிப்பதற்கான ஆணையே வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் சட்டத்தினால் இதில் மாற்றங்களைச் செய்ய முடியாது. அவ்வாறு மாற்றம் செய்வதற்கு புதிய மக்கள் ஆணையும், நாடாளுமன்ற அங்கீகாரமும் பெறப்பட வேண்டும். அதிபரின் பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளாக வரையறை செய்யும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர் கடந்த- 2015 மே மாதம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அவரே கூட மாற்ற முடியாது. வேண்டுமானால் அவர் பதவியை விட்டு விலகலாம். ஆனால், அவருக்குப் பதிலாக அந்தப் பதவியைப் பொறுப்பேற்பவர் ஆறு ஆண்டு பதவிக்காலத்தின் எஞ்சிய காலப்பகுதியையும் நிறைவு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment