//]]>

Monday, January 1, 2018

தமிழ்மக்களை இனியும் துன்பத்துக்கு ஆளாக்காதீர்கள்!: அரசியல் தலைவர்களிடம் செஞ்சொற் செல்வர்- ஆறு. திருமுருகன் உருக்கமான வேண்டுகோள்(Videos)

பலவாறாகப் பிரிந்து எமது மக்களை மீண்டும் மீண்டும் பெரும் துன்பத்திற்கு ஆளாக்காதீர்கள் எனத் தமிழ் அரசியல் தலைவர்களிடம் பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், யாழ். தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி- ஆறு. திருமுருகன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மலர்ந்துள்ள 2018 ஆம் ஆண்டிலாவது தமிழ் மக்களுடைய கண்ணீரைத் துடைப்பதற்கும், இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கும் வடக்கு- கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு மனதுடன் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட்டுச் செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

2018 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எமது செய்திச் சேவைக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கைத் திருநாட்டில் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்படாத காரணத்தால் நீண்டகாலமாகத் தமிழ்மக்கள் மிகவும் வேதனைப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். 

எங்களுடைய தமிழினத்தின் பிரச்சினை முடிவின்றித் தொடர்வதற்கு ஒற்றுமையின்மையே முக்கிய காரணமாகும். அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இந்தச் சமூதாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தற்போது எம்மக்கள் மத்தியில் இல்லாமலிருக்கிறது.

தமிழ்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளிடம் ஒற்றுமையுமில்லாதது நாங்கள் எதிர்நோக்கியிருக்கிற மிகப் பெரிய ஆபத்தாகும். எங்கள் அரசியல் வாதிகளிடம் காணப்படும் ஒற்றுமையின்மை காரணமாக அப்பாவி மக்களான நாம் வழி தெரியாமல், திசை தெரியாமல் தவித்து நிற்கின்றோம். 

வவுனியா பிரதான வீதியில், கிளிநொச்சிப் பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கியவாறு எமது மக்கள் நித்தமும் கண்ணீர் சிந்திப் போராட்டம் நடாத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் எங்களுடைய அரசியல் தலைவர்கள் வாத்தியங்கள், குடை, கொடி ஆலவட்டம் மற்றும் மாலைகளுடன் விழாக்களில் உலா வருகிறார்கள். ஒன்றுமே புரியவில்லை. 

எங்களுடைய அரசியல் தலைவர்கள் மக்களைக் குழப்பி விட்டார்கள். யார் சொல்வது சரி, எவருடைய வழி நேர்மையானது என்பதைப் புரிந்து கொள்வது எமது மக்களுக்குக் கடினமாகவுள்ளது.  எமது அரசியல் தலைவர்கள் எவரிடமும் தெளிவான சிந்தனை இல்லை. மக்களின் பாதுகாப்புப் பற்றிய சிரத்தை இல்லை. 

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் உயிர்கள் கடந்த கால யுத்தம் காரணமாக அநியாயமாகப் பறிகொடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்களின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எங்களுடைய அரசியல் தலைவர்களால் ஒன்றுபட முடியவில்லை என்றால் இதனை விட வெட்கக் கேடான, துக்கமான விடயம் வேறொன்றுமில்லை. 

சுயநலன்களுக்காகவும், பதவி சுக போகங்களுக்காகவும் எங்களுடைய அரசியல் தலைவர்கள் ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் தமிழ்மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

இதேவேளை, 2017 ஆம் ஆண்டு எம்மிடமிருந்து விடைபெற்றுள்ள நிலையில் 2018 ஆம் ஆண்டு எங்களுக்குக் கடமைகளை உணர்த்திக் கொண்டு பிறந்திருக்கிறது. இந்த வருடத்தில் நாட்டில் நல்லது நடைபெற வேண்டுமெனப் பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது இதயபூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment