யாழ். ஊரெழுவைச் சேர்ந்த மூத்த ஆன்மீகவாதி சிவதொண்டன் நா. முருகையா தனது வாழ்நாளில் நூறாவது திருவாசக முற்றோதல் நிகழ்வைப் பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.
யாழ். ஊரெழு கிழக்கு கிளானைப்பதி பர்வதவர்த்தனி மனோன்மணி அம்பாள் ஆலய வருடாந்தத் திருவாசக முற்றோதல் நிகழ்வு அண்மையில் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலய நித்தியகுரு சிவஸ்ரீ வித்தியாதரக் குருக்களின் ஆசியுடன் ஆரம்பமான குறித்த திருவாசக முற்றோதல் நிகழ்வு மூத்த ஆன்மீகவாதி சிவதொண்டன் நா. முருகையா தலைமையில் இடம்பெற்றது. இந்த முற்றோதல் நிகழ்வில் இசைச் சொற்பொழிவாளரும், ஓய்வுநிலை அதிபருமான க. ஆனந்தராசா(கவிமணி அன்னைதாஸன்) உள்ளிட்ட அடியவர்கள் கலந்து கொண்டு மணிவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தைப் பண்ணுடன் முற்றோதினர். இந்த நிகழ்வே அவரது நூறாவது திருவாசக முற்றோதல் நிகழ்வாகும்.
கடந்த காலங்களில் யாழ். குடாநாட்டிலுள்ள பல்வேறு ஆலயங்களிலும் திருவாசக முற்றோதல் மற்றும் திருமுறை ஓதுதல் நிகழ்வுகளில் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டுள்ள நா. முருகையா ஏனைய அன்பர்களையும் ஒன்றிணைத்து ஆலயங்களில் திருவாசகம் ஒதுவதில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒருவராவார். அத்துடன் இவர் நூற்றிற்கும் மேற்பட்ட ஆன்மீக நூல்களை எழுதியும், தொகுத்தும் வெளியிட்டுள்ளார். இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள நூல்களில் பல இலவச வெளியீடுகளும் அடங்கும்.
சைவசமயத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகக் காணப்படும் மணிவாசகர் அருளிய திருவாசகம் 51 பகுதிகளையும், 649 பாடல்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், வருடம் தோறும் மார்கழி மாதம் திருவாசக முற்றோதல் நிகழ்வு பொதுவாக இந்து ஆலயங்களில் சிறப்பாக இடம்பெறுகின்றமையையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(தொகுப்பு மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment