//]]>

Wednesday, January 3, 2018

யாழில் மாணவர்கள், பெற்றோர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி(Photos)

யாழ். பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் இவ்வருடம்  தரம் -10 வகுப்பை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து இரு நாள்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் இன்று(03) முடிவுக்கு வந்தது.

மேற்படி பாடசாலையில் இதுவரை தரம்-09 வரையான வகுப்புக்கள் இயங்கி வந்த நிலையில் க.பொ.த சாதாரண தரம் வரையான வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு பல வருடங்களாக பாடசாலைச் சமூகம் கோரிக்கை விடுத்துவந்தது.

இந்த விடயம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம்- 28 ஆம் திகதி வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம்  கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இவ்வருடம் தரம் -10 வகுப்புக்கு அனுமதி வழங்க முடியாது என டிசம்பர் மாதம்- 28 ஆம் திகதி வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் பதில் வழங்கினார்.

அவரது இந்த அசமந்தப் போக்கான, காலங்கடந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பாடசாலைக்கு முன்பாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(02) கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இப்பாடசாலையில் தரம்- 10 வகுப்பை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் வரை தாங்கள் போராட்டத்தை தொடர்வோம் எனக் கூறிய அவர்கள் இன்று புதன்கிழமை காலையும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தினால் மாணவர்கள் எவரும்  கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடாததுடன் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் போராட்டத்தைக் குழப்புவதற்கு முயன்றதுடன்  போராட்டக்காரர்களை வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அழைத்துச் சமரசம் செய்வதற்குப் பல்வேறு  முயற்சிகளையும் மேற்கொண்டார்.

ஒரு கட்டத்தில் போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களில் ஒருவரான தன்னைப் பொலிஸாரைக் கொண்டு கைது செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை அதிபரூடாக அச்சுறுத்தினார் என பழைய மாணவர் சங்கச் செயலாளர் ந.பொன்ராசா தெரிவித்தார்.

எனினும், மாணவர்களுடன் இணைந்து பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில் இன்றைய தினம் வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.
சம்பவத்தைக் கேள்வியுற்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் சோ.சுகிர்தன் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட மேற்படி பாடசாலைக்குச் சென்று போராட்டக்காரர்களுடனும், அதிபர், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார். இந்தப் பாடசாலை தரம் உயர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவரும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், வலயக் கல்விப் பணிமனையில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தையடுத்து பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் இவ்வருடம் தரம் -10 வகுப்பை ஆரம்பிப்பது எனவும், அடுத்த வருடம் தரம்- 11 வகுப்பை ஆரம்பிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு மாகாணக் கல்வி அமைச்சுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த கடிதத்தின் பிரதி போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டதையடுத்து இன்று மதியம்-01 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினமே தரம்-10 மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் வகுப்புக்கள் ஆரம்பமாகின. இதனால், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment