உள்ளுராட்சி சபைத் தேர்தல் நெருங்கி வருகின்ற இக்காலகட்டத்தில் ஒற்றையாட்சியா? தமிழீழமா? என்ற கோஷத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ இனவாத நோக்கத்துடன் தென்னிலங்கையில் எழுப்பி வருகின்றார். ஒற்றையாட்சியை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதைத் திட்டவட்டமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சியா? தமிழீழமா? என்ற கோஷத்தை தென்னிலங்கையில் முன்னிறுத்தி அண்மைக் கால அரசியலை முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக் ஷ முன்னெடுத்து வரும் நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று(10) பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் எங்களுடைய சுயநிர்ணய உரிமை, இறைமையின் அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத் தானே ஆளக் கூடிய சமஸ்டி அடிப்படையிலான தீர்வையே நாங்கள் கோரி வருகிறோம். நீங்கள் இலங்கைத் தீவுக்குள் ஒரு தீர்வு தேவையென்ற எண்ணத்தைக் கொண்டிருந்தால் சமஸ்டியை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதனை விடுத்துப் பண்டா- செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தோம். தற்போது அதனை எண்ணிக் கவலையடைகிறோம் என பண்டாரநாயக்காவின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க கூறியுள்ளார்.
டட்லி- செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரச்சினையில்லை எனக் கூறிய நீங்கள் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தைக் கூட நடைமுறைப்படுத்தாமல் வடக்கு- கிழக்கைப் பிரித்தீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மீண்டும் நீங்கள் ஆட்சிப் பீடம் ஏற வேண்டுமென்ற கனவினைக் கொண்டிருந்தால் இனவாதக் கருத்துக்களை இத்துடன் கைவிடுங்கள். இந்த நாட்டில் வாழும் வடக்கு- கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ்மக்கள், முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் ஆகியோருடன் தென்னிலங்கையில் வாழும் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் என அனைவருடைய ஆதரவுடன் தான் நீங்கள் ஆட்சிப் பீடம் ஏற முடியும். ஆகவே, இனவாதக் கருத்துக்களை நீங்கள் கைவிடாதவரை உங்களுக்கு அரசியல் எதிர்காலம் கைகூடாமல் போகும் நிலையே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment