வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு தமிழ்மொழி வழி மாநிலத்தை நாங்கள் கோரி நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தை எதிர்கொள்ளக் கூடிய வகையில் வடக்கு- கிழக்கு இணைந்த மாகாணங்களைத தமிழருக்கான மாகாணமாக நாங்கள் கோரவில்லை.தமிழ்மொழி வழி மாநிலமாகவே கோருகின்றோம் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை(19) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லீம் பிரதேசங்களை முஸ்லீம் மக்களே ஆளக்கூடிய வகையிலான சூழலை ஏற்படுத்துவதற்குத் தமிழ்த் தலைமைகளான நாங்கள் தயாராகவேயிருக்கின்றோம். மேலும் ஒரு இனம் இன்னொரு இனத்தை ஆளக்கூடிய வகையிலான நடைமுறைகள் காணப்படக் கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாகவிருக்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கேணல் கிட்டுவுடன் சேர்ந்து முஸ்லீம் கட்சிகள் சில இந்தியாவுக்குச் சென்று ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் சிவசிதம்பரம் தலைமையில் ஏழு கட்சிகள் இணைந்து முஸ்லீம் மக்களின் தலைவராகவிருந்த அமரர் அஷ்ரப்புடன் நடாத்திய கடந்த காலப் பேச்சுவார்த்தையின் பெறுபேறுகளும் காணப்படுகின்றன.
மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய 75 அல்லது 80 சதவீத அதிகாரத்தைப் பெறும் பட்சத்தில் ஒரு சில அதிகாரங்கள் மாத்திரம் முழு மாநிலத்திற்கும் காணப்படும் வகையிலும், ஏனைய அனைத்தையும் பகிரவும் நாங்கள் தயாராகவிருக்கின்றோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment