யாழ். ஊரெழு பலாலி பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை(23) பிற்பகல் மோட்டார்ச் சைக்கிளும் சிறியரக ஹன்ரரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 25 வயதான இளைஞரொருவர் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொடூர விபத்தில் மேலுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று பிற்பகல் யாழ்.குப்பிளானிலிருந்து யாழ்ப்பாணம் நகரத்தை நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஊரெழு பலாலி பிரதான வீதியில் நியூ டிசானி பியூட்டி சென்ரருக்கு அருகில் வயாவிளானிலிருந்து யாழ். நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது.
இதன் போது வேகமாக மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞர் வீதி ஒழுங்கை மீறி தனியார் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட நிலையில் நேர் எதிராக யாழ். நகரத்திலிருந்து பயணித்த சிறிய ஹன்ரர் வாகனத்துடன் மோதுண்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் குறித்த இரு இளைஞர்களும் பல மீற்றர் தூக்கி வீசப்பட்ட நிலையில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியானார். அவருடன் பின்னாலிருந்து பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் பயணித்த மோட்டார்ச் சைக்கிள் சுக்குநூறாகிப் போயுள்ளது.
இளைஞர்கள் செலுத்தி வந்த மோட்டார்ச் சைக்கிள் சிறியரக ஹன்ரருடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் குறித்த ஹன்ரர் ரக வாகனத்தைச் செலுத்திய சாரதி செய்வதறியாத நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹன்ரர் வாகனம் அப்பகுதியில் நின்றிருந்த குடுமபஸ்தரொருவரை மோத முற்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் அவலக்குரல் எழுப்பியதைத் தொடர்ந்து ஹன்ரர் ரக வாகனச் சாரதி உடனடியாக நிதானித்து வாகனத்தைச் செலுத்தியுள்ளார். இதனால், குறித்த குடும்பஸ்தர் அருந்தப்பில் உயிர் தப்பியுள்ளார்.
இந்தக் கொடூர விபத்தில் உயிரிழந்த இளைஞர் யாழ்.குப்பிளான் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் படுகாயமடைந்தவரும் இதேபகுதியைச் சேர்ந்தவராவார்.
இளைஞர் கடும் வேகத்தில் கவனயீனமான முறையில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தியமையே மேற்படி விபத்துக்கான காரணமெனக் குறித்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக விபத்து இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டனர்.
இதேவேளை, இந்தக் கொடூர விபத்துச் சம்பவத்தை நேரில் பார்த்த குடும்பஸ்தரொருவர் விபத்துத் தொடர்பில் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக கருத்து காணொளி வடிவில் உள்ளது. எதிர்பாருங்கள்....
(நேரடி ரிப்போர்ட்:- தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment