பெற்றோர்களையும், முதியவர்களையும் மதிக்க வேண்டுமென நம் பண்பாடு சொல்வது ஏதோ சம்பிராதயமானதொரு விடயமல்ல. அதன் பின்னணியில் வாழ்வியல் ஞானம் குறித்த மதிப்பீடு காணப்படுகிறது. அனுபவசாலிகளை மதித்து அவர்களிடம் நாம் அறிவுரை கேட்பதன் மூலம் உன்னதமான அடைவுகளை எட்ட முடியும் என இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் க. ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.
யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் முன்னாள் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி- தங்கம்மா அப்பாக்குட்டியின் 93 ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா நேற்று முன்தினம்(07) முற்பகல் தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி- ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முதியவர்களை நாம் மதிக்க வேண்டும் எனச் சொல்லப்படுவது வெறுமனே அவர்களின் வயதுக்காக மாத்திரம் அல்ல....அவர்களுக்குக் கிட்டியுள்ள அனுபவத்தால் ஆகும். முதியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பவர்கள் என்றென்றும் நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய காலத்தில் எமது சமூகம் மதிக்கும் ஆளுமைகள் ஒரு காலத்தில் தங்களை விட அனுபவம் மிக்கவர்களிடம் பல்வேறு அறிவுரைகளைப் பெற்று அதன்படி ஒழுகியவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பதை நாங்கள் நினைவிற் கொள்ள வேண்டும்.
வழி வழியாக வற்றாத ஜீவநதி போன்று ஓடிவரும் அனுபவ ஞானம் என்ற வெள்ளத்தால் தான் எங்களுடைய வாழ்க்கை வளம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
பெற்றோர்களையும், முதியவர்களையும் மதிக்க வேண்டுமென நம் பண்பாடு சொல்வது ஏதோ சம்பிராதயமானதொரு விடயமல்ல. அதன் பின்னணியில் வாழ்வியல் ஞானம் குறித்த மதிப்பீடு காணப்படுகிறது. அனுபவசாலிகளை மதித்து அவர்களிடம் நாம் அறிவுரை கேட்பதன் மூலம் உன்னதமான அடைவுகளை எட்ட முடியும்.
கல்வியை ஏட்டுப் படிப்பினால் பெற்றுவிட முடியும், ஆனால், ஞானத்தை வாழ்க்கைப் பள்ளியில் படித்தே அடைய முடியும். அறிவுக்கு விலையுண்டு. ஞானம் விலைமதிப்பற்றது.
கல்வியால் கிடைக்கும் அறிவின் பரிணாமத்தை விட அனுபவத்தால் கிடைக்கும் ஞானத்தின் கன பரிணாமம் பல்லாயிரம் மடங்கு அதிகமாகும். பலராலும் சிரமப்பட்டு உணர இயலாத மாபெரும் உண்மைகளை அனுபவ ஞானத்தால் நம் மனம் ஒரே தடவையில் உணர்ந்து கொள்ளும்.இதன் மூலம் பலருக்கும் வழிகாட்டும் தகுதியை ஒருவனால் பெற்றுவிட முடியும். ஆகவே, ஞானம் வேறு. அறிவு வேறு . கல்வியால் அறிவு வளரும். ஆனால், அனுபவத்தால் தான் ஞானம் பெற முடியும்.
தாய், தந்தையைக் கவனி என்கின்றது வேதம். உற்ற மனைவிக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் பாதுகாப்பாகச் செயற்படச் சொல்கிறது தர்மசாஸ்திரம். வேதமும், தர்மசாஸ்திரமும் சொல்வதை அலட்சியம் செய்பவன் எனது பக்தனாக மாட்டான் என்கிறார் கண்ணன். தர்மசாஸ்திரக் கோட்பாடுகளைச் செயற்படுத்தும் போதும், நாம் செய்யும் கடமைகளில் இறைநாமத்தையும், பக்தியையும் கலந்து செயற்படுத்தும் போதும் இறைவன் எமக்கு எப்போதும் துணையாகவிருப்பான்.
நம் முன்னே காணப்படும் கடமைகளைச் செய்வது தான் நாம் உயர்வு பெறுவதற்குரிய ஒரே வழியாகும் என்பதை நம் எல்லோருக்கும் உணர்த்தியவர் தான் சிவத்தமிழ்ச் செல்வி அம்மையார். அவ்விதம் நம் கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடமிருக்கும் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று உன்னத நிலையை அடைந்துவிடலாம் என்ற உன்னத குறிக்கோளை நமக்கு உணர்த்தியவர் அவர்.
பாடசாலை மாணவ, மாணவிகள் தங்களுடைய கடமைகளைச் சிறுவயதிலிருந்தே சரிவர மேற்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். சொல்லிலும், செயலிலும், எண்ணங்களிலும் தூய்மை மிக்கவர்களாக வாழும் போதே வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடையமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தொகுப்பு:-செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment