பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவம் இல்லாவிட்டாலும் உள்ளூராட்சி சபைகளை இயக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்கியதன் மூலம் தேர்தல் பெறுபேறுகள் வெளியானது முதல் பாரிய குழப்பநிலை உருவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்றைய தினம்(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப் பின்பற்றினால் வெற்றியீட்டிய ஆண் வேட்பாளர்களுக்கு அநீதி விளைவிக்கப்படும்.அத்துடன் பல உள்ளூராட்சி சபைகளை இயக்க முடியாத நிலை உருவாகும். எனவே, விரைவில் இதற்கான சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதே இதற்குரிய சரியான தீர்வாக அமையும்.
ஒவ்வொரு உள்ளூராட்சி சபை செயற்படுவதற்கும் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவம் காணப்பட வேண்டுமென்பதனைத் தேர்தல் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டுமெனச் சட்டம் வலியுறுத்துகின்றது.
எவ்வாறாயினும், வெற்றி பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டிலும் குறைவாக இருந்தால் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சபையில் பெண்களின் நியமனத்தை நிர்ப்பந்திக்கக் கூடாது. கட்சி அல்லது குழு தனக்குரிய ஆசனத்தையும் விட வட்டாரத்தில் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தால் பட்டியலிலிருந்து எவரையும் நியமிக்க முடியாது என அதே சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment