//]]>

Wednesday, February 28, 2018

சிரிய இனப்படுகொலைக்கெதிராக வட, கிழக்கின் நான்கு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்:அணிதிரள அழைப்பு

சிரிய நாட்டில் இடம்பெற்று வரும்  இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் வடக்கு, கிழக்கின் நான்கு மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை(28) நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் குறித்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய இன்று முற்பகல்-10 மணி முதல் வடக்கு மாகாணத்தில் யாழ். நகரிலுள்ள பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாகவும், சமநேரத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும். 

இதேபோன்று, இன்றைய தினம் மாலை-04 மணி முதல் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மக்கெய்சர் மைதானம் முன்பாகவும், அதேசமநேரத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படவுள்ளன.  திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோவிலடியில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்கமுடியாத காரணங்களால் இடமாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

'இனப்படுகொலைக்கெதிரான தமிழ்மக்கள்' என அடையாளப்படுத்தியுள்ளோர் ஒன்றிணைந்து வடக்கு,கிழக்கில் நான்கு மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

சிரிய நாட்டில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைக்கெதிரான மேற்படி கண்டன ஆர்ப்பாட்டங்களில் அனைத்துத் தரப்பினரும் அணிதிரண்டு சிரிய நாட்டில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைக்கெதிராக உரத்துக் குரல் கொடுக்க முன்வர வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment