சிரியாவில் இடம்பெற்று வருகின்ற கொடிய யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை வியாழக்கிழமை(01) யாழ். நகரிலும், கிளிநொச்சியிலும், திருகோணமலையிலும் இடம்பெறுகின்ற கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் க. ஆனந்தகுமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கரங்கள் எண்ணெய் வளச் சுரண்டலையும், ஏனைய கொள்ளை நோக்கங்களையும் இலக்காகக் கொண்டு இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தனது கொடிய யுத்தக் கரங்களால் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற பல்வேறு நாடுகளையும் சூறையாடி, அதன் தொடர்ச்சியாக இன்று சிரியாவில் மிகப்பெரிய யுத்தமொன்றை ஏற்படுத்திவிட்டுள்ளது.
இதில் அமெரிக்கா, ரஸ்யா போன்ற வல்லரசு நாடுகளின் வல்லாதிக்கப் போட்டிக்குள் சிக்கியுள்ள இன்றைய சிரியாவில் இடம்பெற்றுவரும் பயங்கர யுத்தம் குழந்தைகள், சிறுவர்கள் மீது பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளமை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, சிரியாவில் இடம்பெற்றுவரும் இக் கொடிய போரை நிறுத்தக் கோரி நாளை சமூக அக்கறையுள்ள தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்படுகின்ற கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு முழுமையான ஆதரவை வழங்கிநிற்பதுடன், அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடிய யுத்தத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க அனைவரையும் அணிதிரளுமாறு கோட்டுக்கொள்கின்றது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment