வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை(19) முற்பகல் யாழ். சுண்டுக்குழியிலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலக முன்றலில் இடம்பெற்றது.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத் தலைவர் பே.கிரிசாந் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடமாகாணத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்ட பயிற்சி அடிப்படையிலான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை விரைவில் பெறுதல் தொடர்பாக விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் ஒரு கட்டமாகக் கடந்த-2017 இல் வெளியேறிய புதிய வேலையற்ற பட்டதாரிகளுக்கான பதிவுகளும் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் வடமாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கலந்துரையாடல் தொடர்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத் தலைவர் பே.கிரிசாந் எமது செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
எமக்கான நிரந்தர நியமனம் வலியுறுத்திக் கடந்த-143 நாட்களாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளாகிய நாம் இரவு பகலாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தோம். இதன் அடிப்படையில் எமக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை வழங்குவதென அராசாங்கம் எமக்கு வாக்குறுதியளித்திருந்தது. எமக்கான நியமனங்கள் இன்னமும் வழங்கப்படாத நிலையில் அனைத்துப் பட்டாதாரிகளுக்குமான நியமனங்களை விரைந்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி இன்றைய தினம் ஒன்றுகூடிக் கலந்துரையாடியுள்ளோம்.
எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் எங்களுக்குப் பொருத்தமான தீர்வினை வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தியே ஜனாதிபதி, பிரதமருக்கான மகஜர்களை இன்றைய தினம் கையளித்துள்ளோம். எங்களுக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பொருத்தமான தீர்வு வழங்கப்படாதவிடத்து ஜனாதிபதி, பிரதமரை நேரடியாகச் சந்தித்து முறையிடுவோம்.
அதுவும் பலனளிக்காத பட்சத்தில் மீண்டும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர வேறுவழியில்லை என்றார்.
இதேவேளை, இது தொடர்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத் தலைவர், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளில் ஒருவரான அ. நவநீதன் ஆகியோர் எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேகக் கருத்துக்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளி(வீடியோ) இணைப்பில் முழுமையாக காண முடியும்.
(செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment