//]]>

Wednesday, February 7, 2018

அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு வாக்களிக்க வேண்டும்: ஈ.பி.டி.பி வேட்பாளர் ரவீந்திரதாசன் வேண்டுகோள்(Video)

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஒரு தேர்தல்ல. இந்தத் தேர்தல் பிரதேச அபிவிருத்தியை முன்னிறுத்தியதாகவே காணப்படுகிறது. எனவே, அரசியல் வாதிகளின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் இந்தத் தேர்தலில் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு  எமது மக்கள் வாக்களிக்க வேண்டும் என  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை பிரதான வேட்பாளரும், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான  அ. ரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் கந்தர்மடம் வடமேற்கின் இரண்டாம் வட்டாரத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாநகர சபையின் பிரதான வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு நல்லூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப்  பதவி  வகித்த காலத்தில் அப்போதைய அமைச்சராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவுடன் மீள்குடியேற்றப்பட்ட மணியம் தோட்டம்,  அரியாலை கிழக்கு, நாவலடி, முள்ளி போன்ற பகுதிகளில் வடக்கின் வசந்தம் திட்டம் மூலமாகப் பொதுமக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான பல்வேறு  உதவிகள், மின்சாரம் மற்றும் வீட்டுத் திட்ட உதவிகள் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

எனது வட்டாரத்தில் ஏனைய கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதும் எனக்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. நான் வெற்றி பெறும் பட்சத்தில் மக்களின் தேவைகளை இனம் கண்டு அவர்களிற்கான சேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் பிரதேச அபிவிருத்தியிலும் ஆர்வம் காட்டவுள்ளேன்.

எனவே, என்னை மாநகர சபைக்கு மக்கள் தெரிவு செய்யும் பட்சத்தில் பிரதேச மக்களின் அனைத்து அபிவிருத்தியிலும் கூடிய அக்கறை செலுத்தத் திடசங்கற்பம் பூண்டுள்ளேன் எனவும் கூறினார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment