//]]>

Tuesday, March 6, 2018

கண்டி மோதல்கள் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் ஆபத்து!

கண்டியில் சிங்கள, முஸ்லீம்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இனமோதல்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கும் பரவக் கூடிய ஆபத்துக் காணப்படுகின்றமையால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி மாவட்டத்தின் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்றுமுன்தினம்(04) இரவிலிருந்து இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நேற்றைய தினம் பிற்பகல் தீவிரமடைந்தது. இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நேற்றுப் பிற்பகல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கண்டி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.ஏனைய பகுதிகளுக்கும் வன்முறைகள் பரவக் கூடிய ஆபத்துக் காணப்பட்டமையாலேயே உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இன ரீதியான மோதல்களைத் தூண்டும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.நேற்று கென்கல்ல பகுதியில் முஸ்லிம் ஒருவரின் வாணிப நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்ட போதிலும் அது வெடிக்கவில்லை. எனினும், வாணிப நிலையம் மீது கற்களை வீசித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

கண்டியில் ஏற்பட்டுள்ள இனமுறுகலையடுத்து கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் முஸ்லீம் மக்கள் மத்தியில் ஒருவித பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளன. இதேவேளை, ஏனைய பகுதிகளுக்கு வன்முறைகள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்றைய தினம் மூடுமாறு கல்வியமைச்சர்  அகிலவிராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment