//]]>

Saturday, March 10, 2018

சிறுபான்மை இனங்களுக்கெதிரான அநீதிகளுக்குச் சரியான நீதி கிடைப்பதில் காலதாமதம்!:கஜதீபன் காட்டம்(Video)

இந்த நாட்டில் எண்ணிக்கையில் மிகக் குறைவாகக் காணப்படுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக அட்டூழியங்கள், அநியாயங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது தான் வரலாறாகவுள்ளது. இந்த நிலையில் இவ்வாறான அநீதிகளுக்குச் சரியான நீதி கிடைப்பதிலும் காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன என வடக்கு மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த- 21.10.2016 அன்று யாழ். கொக்குவில் குளம்பிட்டிச் சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட விஜயகுமார் சுலக்சனின் 26 ஆவது பிறந்தநாள் நிகழ்வு வியாழக்கிழமை(08) முற்பகல் யாழ். சுன்னாகத்திலுள்ள நினைவுப் பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத இன ரீதியான வன்முறைச் சம்பவங்கள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான காரணங்களால் இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களாகவுள்ள நாமும் ஒரு குடிமக்களாக மதிக்கப்படுகின்றோமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எனினும், சரியான நீதி கிடைப்பதற்கான பொறிமுறைகளை நாம் இன்னமும் இனம் காணாதது துரதிஷ்டவசமானது என்றார்.

(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment