//]]>

Friday, March 2, 2018

கோண்டாவில் சந்தியில் விஷமிகள் செய்த வேலை:பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு...(Videos)

யாழ். கோண்டாவில் சந்தியில் வீதிப் பெயர்க் கற்களை மறைத்து இரவோடிரவாக விஷமிகளால் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்திகளில் ஒன்றான கோண்டாவில் சந்தியில் இடங்கள் தொடர்பான வழிகாட்டும் வீதிப் பெயர்க்கற்களை முழுவதுமாக மறைத்துக் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பில் முச்சக்கர வண்டிச் சாரதிகள் 'Jaffna Vision' செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், 

சந்திகள் தோறும் இவ்வாறான திசைகாட்டும் வீதிப் பெயர்க் கற்கள் நாட்டப்பட்டுள்ளன. இடங்களை வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வீதிப் பெயர்க் கற்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமையால் தூரவிடங்களிலிருந்து வருகை தருவோர் பெரும் பாதிப்புக்களிற்கு முகம் கொடுத்துள்ளனர்.

வீதிப் பெயர்ப்பலகைகள் மறைக்கப்பட்டுள்ளமையால் தனியார் பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், தூரவிடங்களிலிருந்து போக்குவரத்துக்கள் செய்வோர் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நகர அலங்கரிப்புச் செயற்திட்டத்திற்கமைவாக நல்லூர் பிரதேச சபையும், இலங்கை காவற்துறையும் இணைந்து கோண்டாவில் சந்தியில் கோப்பாய்க்குச் செல்லும் வீதிப் பக்கமாக மாத்திரம் பொருத்தியுள்ள வீதிப் பெயர்ப் பலகையும் அப்பகுதியில் வளர்ந்த நிலையிலுள்ள அரச மர இலைகளால் மறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.

அத்துடன் குறித்த வீதிப்பெயர்க் கல், வீதிப்பெயர்ப் பலகை அமைந்துள்ள பகுதியைச் சூழ பல விளம்பரப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வீதிப்பெயர்க் கல், வீதிப்பெயர்ப் பலகைகளை இனம் கண்டு கொள்வதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளன. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர்ப் பிரதேச சபையின் செயலாளரும், கோப்பாய்ப் பொலிஸாரும் இந்தவிடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தி உடனடித் தீர்வு பெற்றுத் தர வேண்டுமெனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(நேரடி ரிப்போர்ட்:- தமிழின் தோழன்-)










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment