பாகிஸ்தானில் புழக்கத்தில் இருக்கும் ரூ.5000 நோட்டுகளை செல்லாது என அறிவிக்கக் கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மேல் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ.5000 நோட்டுகளுக்குத் தடை விதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் மேல் சபையில் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர் உஸ்மான் சைஃபுல்லா தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
எனினும், மேல் சபையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருப்பதால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, தீர்மானம் கொண்டுவந்து உஸ்மான் சைஃபுல்லா கூறுகையில், "சட்டவிரோதமாக உள்ள பணப் புழக்கத்தைக் குறைப்பதற்காகவும், வங்கிப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும் புழக்கத்தில் உள்ள ரூ.5000 நோட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றார்.
அப்போது, சட்டத் துறை அமைச்சர் ஜாஹித் ஹமீத் கூறுகையில், "உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்தால், அண்டை நாடான இந்தியாவில் ஏற்பட்டது போன்று நிதி நெருக்கடி ஏற்படும். 3.4 லட்சம் கோடி ரூ.5000 தாள்கள் புழக்கத்தில் உள்ளன. நிதி நெருக்கடி ஏற்படாமல் உயர் மதிப்புடை ரூபாய் நோட்டுக்குத் தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை' என்றார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 117-ஆவது இடத்தில் உள்ளது.
0 comments:
Post a Comment