தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கருணா குழுவினருக்கு வழங்கப்பட்டது என நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்தினூடாக இராணுவப் புலனாய்வுப் படையணிக்கு வழங்கப்பட்டுப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மூன்றாம் இராணுவப் புலனாய்வுக் கட்டளை மையத்தினூடாக கருணா குழுவுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கு நேற்றுப் புதன்கிழமை(21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் மேற்பார்வையில் விசேட ஜுரிகள் சபை முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இராணுவத் தளபதி சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த இராணுவ நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் குணவர்தன மற்றும் இராணுவப் பலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் லியனகே ஆகியோரின் சாட்சியம் ஊடாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கியுடன் சுமார் 150 வரையிலான துப்பாக்கிகளும், யுத்த உபகரணங்களும் இவ்வாறு கருணா குழுவினருக்கும், இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட குழுக்களுக்கும் வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த-2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் -04ஆம் திகதி குறித்த ஆயுதமும், மேலும் ஒருதொகை ஆயுதங்களும் இராணுவப் புலனாய்வுப் படையணிக்கு விநியோகம் செய்யப்பட்டதாகவும், உளவுத் தகவல்களை சேகரித்துத் தாக்குதலுக்குத் தேவையான பொறிமுறையை வழங்கும் நோக்கிலேயே இதனைச் செய்திருப்பதாகவும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், மூன்றாவது புலனாய்வுக் கட்டளை மையத்திலிருந்து செயற்பட்ட நட்புக் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எந்தவித ஆவணங்களும் தரவுப்படுத்தப்படவில்லை எனச் சாட்சியாளர்கள் மன்றில் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment