//]]>

Tuesday, December 13, 2016

யாழ். இளைஞர்கள் தொடர்பில் எங்கே சென்று முறையிடுவது? புலம்பும் அனந்தி சசிதரன்(Photo)

நான் வடமாகாண சபை உறுப்பினராகவிருக்கும் நிலையில் எனக்குப் பின்னால் பொலிஸார் பாதுகாப்புக்காக வருகை தந்தாலும் என் எதிரில் வரும் இளைஞர்கள் என்னைப் பார்த்துக் கண்ணடிப்பதும், நாக்கு நீட்டுவதுமான துன்பங்களை அவதானித்தவாறே செல்ல வேண்டியுள்ளது. இதற்கு நாங்கள் எங்கே சென்று முறையிடுவது? இதற்காக அவர்களுக்கு அடிக்க முடியுமா? பேச முடியுமா? இது இவர்களுடைய சுபாவமாக இருக்கிறது என்ற மனநிலை எங்களுக்கிருக்கிறது எனத் தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி- அனந்தி சசிதரன். 

யாழ். சமூக  செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கெதிரான 16  நாள் விழிப்புணர்வுச் செயற்பாட்டின் இறுதிநாள் நிகழ்வு  கடந்த வெள்ளிக்கிழமை(09)  யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் "வன்முறையற்ற மகிழ்வான குடும்பம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற போது  பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

எனக்கு வயது-45.  என்னுடைய வயதுக்கு எனக்கு முன்னால் வருகை தரும் இளைஞன் எனக்குப் பிள்ளையாகவுள்ள வயதையொத்த இளைஞன். ஆனால், இவ்வாறான நிலை தான் இங்குள்ளது. சட்டமும், ஒழுங்கும் இங்கு இறுக்கமாக இல்லை.  

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான விழிப்புணர்வு என்பது அடிமட்டக் கிராமங்களிலிருந்து கொண்டுவரப்பட வேண்டிய விடயமாகும். எங்களுடைய கலாசாரம் எப்போதுமே ஆண் மேலாதிக்கத்தையே வலியுறுத்தி வருகிறது. சிறுபராயத்திலிருந்தே ஆண்களுக்குக் கூடுதலான உரிமையையும், பெண்களை அடக்கி வைக்கின்றதொரு சமூகமாகவுமே இருந்து வந்திருக்கிறது.தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இது தலைகீழாக மாற்றப்பட்டு  ஆண்- பெண் சமத்துவம் நிலைநாட்டப்பட்டது. 

ஆனால், போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் மீண்டும் பெண் அடிமைத்தனமும், பெண்களுக்கெதிரான வன்முறையும் அதிகரித்து வருகிறது.  வீட்டு வன்முறை மாத்திரமல்லாமல் வீடுகளுக்கு வெளியில் இடம்பெறும் வன்முறைகளும் அதிகரித்துள்ளன.இறுக்கமான சட்டங்கள் அமுல்படுத்தப்படாததுடன் , பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நியாயம் கிடைப்பதில்லை என்றதொரு குற்றச் சாட்டும் இருந்து வருகிறது. விடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர் பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன. 

அண்மைக் காலங்களில் எமது மண்ணிலும், புலம்பெயர் தேசங்களிலும் விவகாரத்துக்கள் அதிகரித்துப் போயுள்ளன. சிறு பராயத்தில் ஆண்களுக்குக் கூடுதலான ஊட்டச் சத்தும், பெண்களுக்குக் குறைவான ஊட்டச் சத்தும் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாகவும், கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் சிறுவயதிலிருந்து போதிக்கும் நமது தாய்மார் ஆண்களுக்கான ஒழுக்க விழுமியங்களைச் சிறுவயதிலிருந்து போதிப்பதில்லை. இதன் காரணமாகத் தாங்கள் எதுவும் செய்யலாம் என்ற  மன நிலை ஆண் பிள்ளைகளின் மனதில் அழியாது பதிந்து விடுகிறது. 

ஒரு பெண் பாதிப்பினை எதிர்நோக்கியிருந்தால் அந்தப் பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுச் சம்பந்தப்பட்ட நபர் நீதியின் முன் நிறுத்தப்படும் பட்சத்தில் ஆண் மகன் பண பலமும், செல்வாக்கும் கூடியவராகவிருந்தால்  அந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் போக்கும் காணப்படுகிறது. இதற்காக வாதிடுபவர்களாக எங்களது சட்டத்தரணிகள் உள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட பெண் பிள்ளை மீது குற்றம் சுமத்தப்பட்டு நன்னடத்தைப் பிரிவிற்கு மாற்றப்படுகிறார்.இந்த விடயத்தில் நானும் அனுபவப்பட்டிருக்கிறேன். 

தற்போது என்னிடம் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் யாருமே வந்து முறையிடுவதில்லை. இந்த விடயத்தை வெளிக் கொணராமலேயே விட்டிருக்கலாம் என்னிடம் முறையிட்டு என்னுடைய பிள்ளையை நன்னடத்தைப் பிரிவிற்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குற்றமிழைத்தவன் வெளியில் திரிகிறான் என்ற மன நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும் போது  பொலிஸ் நிலையத்திலேயே அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இவ்வாறான சம்பவங்கள் சகல பொலிஸ் நிலையங்களிலும் இடம்பெறுகின்றது எனவும் அவர் குற்றம் சாட்டினார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment