2017ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 13.12.2016 அன்று ஆரம்பமாகியது.
சிவனொளிபாதம் (சிங்களவர்கள் சிறிபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.
மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.
இந்து சமயங்களின் நம்பிக்கைகளின்படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர்.
இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக 13.12.2016 அன்று அதிகாலை மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.
இந்தமுறையும் 3 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.
அந்தவகையில் இரத்தினபுரி – அவிசாவளை வீதியில் ஊர்வலம் பயணித்து அட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது.
மற்றைய ஊர்வலம் இரத்தினபுரி – பலாபத்தல வீதி ஊடாக பயணித்தது.
தெய்வீக ஆபரணங்களை ஏந்திய மூன்றாவது ஊர்வலம் பெல்மதுளை – ஓப்பநாயக்க, பலாங்கொட, பின்னவல, பொகவந்தலாவ ஊடாக சிவனொளிபாதமலையை அடைந்தது.
மேற்படி சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு நல்லதண்ணீர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி வழியாகவும், அட்டன் வழியாகவும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரையை மேற்கொள்ள முடியும்.
மது அருந்த மற்றும் எந்தவிதமான இசைக்கருவிகள் கொண்டு செல்ல முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் என பல எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment