தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் 125 யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள குடும்ப மருத்துவ நிறுவகத்தின் மேல் மாடியில் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி சனிக்கிழமை யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது.
கனடா வாழ் திரு அன்ரன் பிலிப் அவர்களின் நீண்ட கால எண்ணக் கரு
கனடா வாழ் திரு அன்ரன் பிலிப் அவர்கள் தனது நீண்ட கால எண்ணக் கருவிற்கு உருக்கொடுத்தமையால் இம்மையம் உதயமாகியுள்ளது.
அ.பி.ஜெயசேகரம் அடிகளாரை இணைப்பாளராகக் கொண்டு இயங்கவுள்ள இம்மையத்திற்கான இடவசதியை தமிழ்ப்பணி புரிந்த தாவீதடிகளின் அன்புப்பிணைப்பில் வாழ்ந்த மருத்துவக் கலாநிதி எஸ். பூலோகநாதன் அவர்கள் வழங்க முன் வந்துள்ளார்.
மேற்படி திட்டத்தில் தனிநாயகம் அடிகளின் தூரநோக்கில் முகிழ்ந்த தமிழ் மொழி - இலக்கியம். பண்பாடு - மனித உரிமை ஆன்மிக வளங்களில் ஆய்வுப் புலமை அடைவதற்கும், அயல் மொழிகளில் ஒப்பாய்வு செய்வதற்கும் இம்மையம் வழி வகுக்கும் என அறிவிக்கப்டுகிறது.
தனிநாயகம் அடிகளின் தொலைநோக்கு என்னும் தலைப்பில் சிறப்புரையை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்தினார் சிறப்பு அதிதியாக வட மாகாண அவைத்தலைவர் திரு சி.வி.கே. சிவஞானம் அவர்கள் கலந்துகொண்டார்.
தனிநாயகம் அடிகளாரின் அருங்காட்சியகமும் அன்று திறந்து வைக்கப்பட்டது.
அடிகளாரின் அருங்காட்சியமும் அன்று திறந்து வைக்கப்பட்டது. அங்கு தனிநாயகம் அடிகளார் எழுதிய - அவரைப்பற்றி எழுதப்பட்ட - அவரால் அச்சு செய்யப்பட்ட 150 அதிகமான நூல்கள் மற்றும் கட்டுரைகள் நினைவுப்பேருரைகள் போன்ற விடயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவை ஆய்விற்கு பயன்படுத்தக்கூடிய விதமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தனிநாயகம் அடிகளாரின் வாழ்வும் பணியும் பற்றி ஒருவர் ஒரு சில மணித்துணிகளிலேயே அறிந்து கொள்ளக்கூடிய விதமாக அழகிய முறையில் விளங்கங்களைத் தரக்கூடிய தகவல்கள் தொங்க விடப்பட்டுள்ளன. அடிகளார் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் தழிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 2 ஆயிரம் பக்கங்களில் 3 பாகங்களாக வெளியிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை ஆர்வலர்கள் வாங்க முடியும். தனிநாயகம் அடிகளாரின் வாழ்வியல் - ஆனமீகம் - தமிழியல் - இதழியல் - அரசியல் - மனித உரிமை - தலைமைத்துவம் பற்றிய 75 கட்டுரைகளை தனிநாயகம் அடிகளாருடன் பழகியவர்கள் - அவரிடம் படித்தவர்கள் - அவரின் தமிழ்ப்பணியில் ஆர்வமுடன் உழைத்தவர்கள் போன்றோரால் எழுதப்பட்ட கட்டுரைகள் நூல்வடிவில் தொகுக்கப்பட்டு காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை விட தனிநாயகம் ஒரு தமிழ்நாயகம் என்னும் அடிகளாரின் வாழ்வு பற்றிய இந்தியாவைச் சேர்ந்த அமுதன் அடிகளாரால் எழுதப்பட்ட நூலும் அடிகளார் பற்றிய ஒரு ஆவணப்படமும் 9 வேறுபட்ட இசைவடிவம் கொண்ட பாடல்கள் அடங்கிய குறுந்தகடும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
கனடா வாழ் திரு அன்ரன் பிலிப் அவர்களிடம் தனிநாயகம் அடிகளாரிலும் அவரின் தமிழ்ப்பணிகளிலும் எப்படி ஆர்வம் பெற்றீர்கள் என்று கேட்டபோது அவர் தெரிவித்த விடயங்கள் அவரின் நீண்டகால எண்ணக்கருவை தெட்டத் தெளிவாக்கிது.
1972ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை எனது பயிற்சிக்காலத்தில் இந்தியா பூனேயில் இருந்தும் கண்டியில் இருந்தும் விடுமுறைக்கு வரும்போது ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு மாதம் வளலாயில் தனிநாயகம் அடிகளாருடன் தங்கியிருப்பேன்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனிநாயகம் அடிகளாருடன் மணிக்கணக்காய் பேசுவேன். அப்போதெல்லாம் அவரின் பன்முக ஆளுமை - தமிழ் மீது உள்ள அளவு கடந்த பற்று - அவர் செய்த ஆய்வுகள் - பங்களிப்புகள் என்பவற்றை அறிந்து வியந்தேன். இதன் காரணமாக படிப்படியாக எனக்குள் இருந்த தமிழ்ப்பற்று வளர்ந்தது.
தனிநாயகம் அடிகளார் மேல் அன்பும் அபிமானமும் அதிகரித்தது. 1980இல் தனிநாயகம் அடிகள் இறைபதம் எய்திய போது அவரின்மேல் கொண்ட அளவு கடந்த பற்றினால் அவihப்பற்றிய கட்டுரைகளை ஊடகங்களுக்கு எழுதி வெளியிட்டு அவர் தமிழுக்கு ஆற்றிய தமிழ்ப்பணிக்கு புகழ் சேர்த்து மன ஆறுதல் அடைந்தேன் என்றார்.
திருச்சியில் தனிநாயகம் அடிகளார் தொடக்கி வைத்த தமிழ் இலக்கியக்கழகம்
1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்நாட்டு ஆயர் பேரவையின் அங்கீகாரத்துடன் தனிநாயகம் அடிகளால் திருச்சியில் தொடக்கி வைக்கப்பட்ட தமிழ் இலக்கியக்கழத்தில் 90களின் இறுதியில் பணியாற்றிய அமுதன் அடிகளார் தனிநாயகம் அடிகள் மேல் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். அவரின் வாழ்வும் பணியும் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டு புத்தகங்களையும் வெளியிட்டவர்.
அவர் 2000ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகளார் இதழியற் கல்லூரியை திருச்சியில் தொடக்கி வைத்து அது இன்றும் செயற்பட்டு வருவது பெருமைக்குரியது. இவர் தமிழ் இலக்கியக்கழகப் பணிகளில் இருந்து விடுபட்ட போதிலும் தனிநாயகம் அடிகளாரின் தூரநோக்கை மேலும் செயற்படுத்துபவராக தனிநாயகம் அடிகளாரின் பெயரில் ஒரு ஆய்வு மையத்தை திருச்சியில் ஆயர்கள் ஒப்புதலுடன் தொடக்கி வைத்து அதன் இயக்குனராக தற்போது பணியாற்றி வருகிறார். யாழ் நகரில் டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் ஆய்வு மைய உதய நிகழ்விற்கு அமுதன் அடிகளார் வந்து சிறப்புரை ஆற்ற இருந்த போதிலும் தமது திடீர் சுகவீனம் காரணமாக வரமுடியாமற் போனது துரதிஸ்ரவசமானதே.
தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா 1913 - 2013
திரு அன்ரன் பிலிப் அவர்களிடம் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா பற்றிக் கேட்ட போது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை (1913 - 2013) பெரும் எடுப்பில் கனடாவில் ரொறொன்ரொ - மொன்றியல் நகரங்களில் நடத்த முழு முயற்சியும் எடுத்தேன்.
கலை நிகழச்சிகள் சிறப்புச் சொற்பொழிவுகள் - கருத்துப் பேரங்குகள் என்பவற்றுடன் நூற்றாண்டு விழா சிறப்புடன் நடத்தப்பட்டது. இந்தியாவில் நாகர்கோவில் திருநெல்வேலி போன்ற நகரங்களில் இடம்பெற்ற தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றினேன். என்றார்.
தனிநாயகம் அடிகளுடைய வாழ்வும் பணியும்
இலங்கையின் வடபகுதியான தீவுப்பகுதியில் கரம்பொன் ஊரில் 1913இல் இந்து சமயப் பின்னணியில் பிறந்தார்.
1923 - 1930 ஆண்டுகாலப்பகுதியில் சேவியர் ஸ்ரனிஸ்லோஸ் என்ற பெயருடன் புனித பத்திரிசியார் கல்லூரியில் கேம்பிறிச் தேர்வுவரை கல்விகற்றார்.
குருவாகும் எண்ணத்துடன் 1931 - 1934 ஆண்டுகாலப் பகுதியில் பொரளை புனித பேர்ணாட் குருத்துவக் கல்லூரியில் மெய்யியல் கற்றார்.
குருத்துவக் கல்லூரியிலிருந்து விலகி தாம் கல்வி கற்ற புனித பத்திரிசிரியார் கல்லூரியில் ஆசிரியப் பணி புரிந்தார். இவை இவரின் வாழ்வின் முதல்கட்டமாகும்.
திருவானந்தபுரம் மறைமாவட்ட பேராயர் மார் இவனியோஸ் ஆண்டகையின் அழைப்பின் பேரில் திருவானந்தபுரம் மறைமாவட்டத்தில் இணைந்தார் - 1935 - 1938 ஆண்டு காலப்பகுதியில் உரோமையில் இறையியல் கற்றார். 1938இல் குருவானார்.
1939இல் திருவானந்தபுரம் மறைமாவட்ட புனித ஞானப்பிரகாசர் சிறிய குருமடத்தில் ஆசிரியப்பணியாற்றினார். தொடர்ந்தும் மேற்கல்விகற்க சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் திருவானந்தபுரம் மறைமாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மறை மாவட்டத்தில் இணைந்தார்.
1940 - 1945 ஆண்டுகாலப்பகுதியில் ஆயர் பிரான்ஸ்சிஸ் திபூசியஸ் றோச் ஆண்டகையின் பணிப்பின்பேரில் வடக்கன்குளம் புனித திரேசம்மாள் உயர்நிலைப்பள்ளியில் துணைத்தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
1945 - 1947 காலப்பகுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைமாணிப்பட்டம் பெற்றார். - 1947 - 1949 ஆண்டு காலப்பகுதியில் பேராசிரியர் அ. சிதம்பரநாதன் செட்டியாரின் வழிகாட்டலில் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்னும் தலைப்பில் இலக்கிய முதுகலைமாணிப்பட்டம் பெற்றார்.
1948 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தமிழ் இலக்கியக் கழகத்தை தோற்றுவித்தார் - 1949 - 1950 காலப்பகுதியில் சீனா யப்பான் அமெரிக்கா நாடுகளில் தமிழரின் கலை இலக்கியம் பண்பாடு வரலாறு என்பவற்றைப்பற்றி சொற்பொழிவாற்றல் - இவை இவரின் வாழ்வில் இரண்டாம் கட்டமாகும்.
1952 - 1961 காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை விரிவுரையாளர்பணி ஆற்றினார் - தமிழர் பண்பாட்டுக் கழகத்தை நிறுவினார்; - தமிழ் கல்சர் என்ற ஆங்கில இதழ் வெளியிட்டார் - 1955 - 1957 ஆண்டுகாலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து மாற்றலாகி இங்கிலாந்தில் காலாநிதிப்பட்டம் பெற்றார்.
1956 - 1961 ஆண்டுகாலப்பகுதியில் நடைபெற்ற சிங்கள மொழி சட்டத்தை எதிர்த்து தமிழ்மக்களின் அகிம்சைப்போராட்டங்களில் இணைந்தார் - இதனால் அரசோடு முரண்;பட்டார் - தமிழ்மொழி உரிமை பற்றிய தனிநாயகம் அடிகளாரின் சொற்பொழிவுகள் அரசால் கூர்ந்து அவதானிக்கப்பட்டது.
இதனால் 1961 - 1969 ஆண்டுகாலப்பபகுதியில் மலேசிய பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகள் துறையின் தலைவர் பணியேற்றார் - இவை இவரின் வாழ்வின் முன்றாம் கட்டமாகும்.
1964இல் உலகத் தமிழாராட்சி மன்றம் - என்ற அமைப்பை சென்னை மாநில தமிழ் வெளியீட்டுக்கழகத்தின் துணையுடன் புதுடில்லியில் தொடங்கினார் - இந்த அமைப்பின் மூலம் உலகத்தமிழ் மகாநாடுகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த திட்டமிட்டார் - 1966ஆம் ஆண்டு முதல் உலகத்தமிழ் மாகாநாட்டை மலேசியாவில் ஒழுங்குசெய்தார்.
1969இல் மலேசியாப் பல்கலைக்கழகத்திலிருந்து விலகி இலங்கை திரும்பினார். 1972வரை கண்டியில் தங்கி ஆசிய அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு வருகைநிலைப் பேராசிரியராக சென்றுவந்தார் - யாழ் மறைமாவட்ட வளலாய் என்னும் இடத்தில் உள்ள விடுமுறை இல்லத்தில் 1979ஆம் ஆண்டுவரை தங்கியிருந்தார் - பின்னர் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் தங்கியிருத்தார்; - 1980ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார் - இவை இவரின் வாழ்வின் நான்காம் கட்டமாகும்.
தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் வாழ்வும் பணியும் பற்றி இன்றைய இளம் சமுதாயத்தினர் அறியும் வகையிலும் அவரின் பணி தொடரும் வகையிலும் இம்மன்றம் செயற்படுவது சிறப்பானது. தமிழ் மொழி - இலக்கியம் - பண்பாடு - ஆன்மிக வளங்களில் ஆய்வுப் புலமை அடைவதற்கு இம்மன்றம் வழிவகுக்கும் என்ற அழைப்பை சிறப்பாகப் பயன்படுத்த தகுதி வாய்ந்தவர்கள் முன்வரவேண்டும்.
அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை
ஊடக வருகை விரிவுரையாளர் -
யாழ் பல்கலைக்கழகம்
0 comments:
Post a Comment