வடக்கு மாகாணத்திலுள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைவாக ஏற்கனவே மாகாணத்திலுள்ள பல நன்னீர் மீன்பிடிச் சங்கங்களுக்கு அவர்களது குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிட்டு வருவது யாவரும் அறிந்ததே.
இதனடிப்படையில், மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமமான பூமலர்ந்தானிலுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக பூமலர்ந்தான் குளத்தில் 50 ஆயிரம் மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(16) மதியம்-12:30 மணியளவில் இடம்பெற்றது.
வடமாகாண மீன்பிடி அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து (PSDG) ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 50,000 மீன்குஞ்சுகள் கொள்வனவு செய்யப்பட்டுக் குறித்த குளத்தில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனுடன் மடு பிரதேச செயலாளர் எப்.சி.சத்தியசோதி, இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மன்னார், வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி பா.நிருபராஜ், மன்னார் மாவட்டக் கிராம அபிவிருத்தித் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.மைக்கல் கொலின், பூமலர்ந்தான் பகுதிக் கிராமசேவகர், கிராமமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments:
Post a Comment