சிவபூமி அறக் கட்டளையின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும், யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி - ஆறு.திருமுருகனின் தாயாரான இளைப்பாறிய ஆசிரியை திருமதி-சரஸ்வதி ஆறுமுகம் தனது 90 ஆவது வயதில் புதன்கிழமை(14) மாலை யாழில் காலமானார்.
கடந்த பல நாட்களாக சுகவீனமுற்றிருந்த அம்மையார் யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் கல்விப் பாரம்பரியத்தின் அடையாளமான யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியையாக விளங்கி 41 ஆண்டு காலம் ஆசிரியப் பணியாற்றினார். இதன் மூலம் தனித்துவ ஆளுமை மிக்க மாணவ பரம்பரையை உருவாக்குவதற்கு வித்திட்டவர்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்மையார் சைவசீலர் ஆறுமுகம் ஆசிரியரின் பாரியாராவார்.
யாழ்.நல்லூரிலுள்ள அம்மையாரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதைத் தொடர்ந்து பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் அஞ்சலியுரைகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்றுப் பிற்பகல்-05 மணியளவில் இணுவிலுள்ள அம்மையாரது பூர்வீக இல்லத்திற்குப் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கிருந்து செங்கம்பள வரவேற்புடன் இணுவில் இந்து மயானத்திற்கு அம்மையாரது பூதவுடல் பூவோடை இந்து மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுப் பொழுது சாயும் வேளையில் அம்மையாரது உடல் தீயுடன் சங்கமமானது.
அம்மையாரது இறுதி அஞ்சலி நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன், வடமாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த உட்பட ஆன்மீகவாதிகள்,பேராசிரியர்கள், கல்வியியலாளர்கள், பல்துறை சார்ந்தவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
0 comments:
Post a Comment