//]]>

Saturday, December 10, 2016

யாழில் பால்நிலை வன்முறைக்கெதிரான விழிப்புணர்வு (Photos)

யாழ். சமூக  செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைக்கெதிரான 16  நாள் விழிப்புணர்வுச் செயற்பாட்டின் இறுதிநாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(09) முற்பகல்-10 மணி முதல் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் "வன்முறையற்ற மகிழ்வான குடும்பம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. 

யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் என்.சுகிர்தராஜ்  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி- அனந்தி சசிதரன் பிரதம விருந்தினராகவும், இலங்கை மற்றும் மாலைதீவு ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் உதவிச் செய்தி அதிகாரி செல்வி-றசேல், யாழ்.மகளிர் அபிவிருத்தி நிலைய இயக்குனர் திருமதி-சரோஜா சிவச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் செல்வி-உதயனி நவரட்ணம் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு பெண்கள் வன்முறைக்கெதிராகவும், பால்நிலை சமத்துவம் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் கருத்துரைகள் ஆற்றினர்.  
நிகழ்வில் யாழ்.பல்கலைக் கழகச் சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நடராஜா குருபரன் சிறப்புரை நிகழ்த்தினார். இதன் போது பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாட்டில் யாழ்.சமூகச் செயற்பாட்டு மையத்தால் கிராம மட்டத்தில் செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளின் விளக்கக் காணொளி பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து குறித்த செயற்திட்டத்தின் மூலம் கிராம மட்டத்தில் நன்மை பெற்ற பயனாளிகள் சார்பில் புங்குடுதீவைச் சேர்ந்த மாதுரி என்வரும், சங்கானையைச் சேர்ந்த அன்னலிங்கம் என்பவரும்  தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  இந்த நிகழ்வை நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் வி.சுதர்சன் முன்னிலைப்படுத்தினார். 

குறித்த நிகழ்வில் இளைஞர்கள், யுவதிகள், பல்துறை சார்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment