//]]>

Wednesday, December 21, 2016

தைமாதம் முதல் இணைந்த நேர அட்டவணை அமுல்; மீறுவோர் மீது கடும் நடவடிக்கை(Photos)


வடக்கு மாகாணப்  பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நான்காவது அமர்வு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(20) பிற்பகல்- 3:30 மணி முதல் யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த அமர்வில் அதிகாரசபையின் தலைவர் அ.நிக்கொலஸ்பிள்ளை மற்றும் சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்,.

குறித்த அமர்வில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டாலும், விசேடமாகத் தற்போது வடக்கில்  அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கான பிரதான காரணங்களில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை ஆகிய பேரூந்து சேவைக்கான இணைந்த நேர அட்டவணை சரியான முறையில் பின்பற்றப்படாமையும் ஒரு காரணியாகக் காணப்படுகிறது. 

ஏற்கனவே, தயார் செய்யப்பட்டு அமுல்படுத்த முற்பட்ட வேளையிலே ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டதால் அது அமுல்படுத்தப்படவில்லை. அந்தக்  குறைபாடுகள் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை ஆகிய இருதரப்பினராலும் திருத்தியமைக்கப்பட்டு மீண்டும் எதிர்வரும்- 2017 ஆம் ஆண்டு தைமாதம் குறித்த இணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்தவுள்ளதாக சபையினால் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இது தொடர்பில் வடமாகாணப் போக்குவரத்து  அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், 

இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தியபின்னர் அதனை மீறுகின்ற எந்தத் தரப்பினராகவிருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு எமது மாகாணத்தின் மக்களது உயிர்களில் அக்கறையுள்ளவர்களாக சகல சாரதி நடத்துனரும் நடந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார். 

இதேவேளை,  இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணப்  பிரதம பிராந்திய முகாமையாளர் மற்றும் வட இலங்கைத் தனியார் பேரூந்து சங்கங்களின் தலைவர் ஆகியோர் சபையின் உறுப்பினர்களாக உள்ளதோடு, அவர்கள்  இணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்த தமது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment