//]]>

Saturday, December 10, 2016

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பில் பேசுவதற்கு அருகதையில்லாத டக்ளஸ் தேவானந்தா (Photo)

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியற் செயற்பாடுகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா விமர்சித்திருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பில் பேசுவதற்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு எந்த அருகதையும் கிடையாது எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(09) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், 

டக்ளஸ் தேவானந்தாவைத் துணை இராணுவக் குழுவின் ஒரு தலைவராகவே மக்கள் பார்க்கிறார்கள். கடந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து சந்திரிக்கா அரசுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்து கொண்டு இராணுவத்தின் துணை இராணுவக் குழுவாகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயற்பட்டிருக்கிறது. 

யாழ்.குடாநாட்டிலும் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் அவர்களுடைய செயற்பாடுகள் துணை இராணுவக்  குழுக்கள் என்ற அடிப்படையில்  தொடர்ந்த வண்ணமிருந்திருக்கிறது. 

கடந்த-2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்தன்பின்னர் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமற் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆணைக்குழு என்பன  உருவாக்கப்பட்டன. இந்தக் குழுக்களிற்கு முன்னிலையில் சாட்சியமளித்த  நூற்றுக் கணக்கான பொதுமக்கள் தங்களுடைய பிள்ளைகள், கணவன்மார், சகோதரர்கள் ஆகியோர் காணாமற் போனமைக்கு  ஈ.பி.டி.பி அமைப்புத் தான் காரணம் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

பொதுமக்கள் ஆணைக்குழுக்களிடம் செய்த முறைப்பாடுகளில் ஈ.பி.டி.பி அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு இந்த அமைப்பே தமது உறவுகளைக் கடத்தியதெனவும் , காணாமற் போகச் செய்ததெனவும், கொலை செய்ததெனவும் தெரிவித்திருந்தார்கள். 

அனைத்துக்கும் மேலாகக்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் 2001 ஆம் ஆண்டு தீவகப் பகுதிக்குத் தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது கொலை வெறித் தாக்குதலை மேற்கொண்டு இருவரைப் படுகொலை செய்ததுடன் பலரையும் படுகாயப்படுத்தியமைக்காக ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த இருவருக்கு இரண்டு மரணதண்டனைகள் கூட வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறானதொரு நிலையில் டக்ளஸ் தேவானந்தா தனக்கும், இவ்வாறான செயற்பாடுகளுக்கும் தொடர்பில்லையெனக் கூறியிருப்பது அவர் மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார் எனவே கருத வேண்டியுள்ளது. 

டக்ளஸ் தேவானாந்தாவிற்கு என் மீதும் காய்ச்சல் உள்ளது. அதற்குக் காரணம் ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட போது ஈ.பி.டி.பி கட்சி தான் இந்தக் கொலையைச் செய்தது என்பதை உறுதி செய்து கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சுமார்-5000 மாணவர்களை ஒன்று திரட்டிப் பாரிய எதிர்ப்பு ஊர்வலமொன்றை நடாத்தியமை ஆகும்.  இந்த எதிர்ப்பு ஊர்வலம் இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது. 

ஊடகவியலாளரொருவர் எழுப்பிய இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களையே கொலை செய்த ஈ.பி.டி.பி தேர்தல் அதிகாரிகளைச் சும்மா விட்டிருக்குமோ!, ஈ.பி.டி.பி தீவகத்தில் எவ்வாறு செயற்பட்டது என்பது குறித்துத் தெரியும் தானே!, ஆகவே, கள்ள வாக்குகள் மூலம் தான் ஈ.பி.டி.பி பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் எனவும் குறிப்பிட்டார்.  


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment