அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஊடகங்கள் இயங்கி வருவதை புதிய ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக பார்ப்பதாக ட்ரம்ப்புக்கு நெருங்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தொலைபேசியில் ட்ரம்புக்கு நெருங்கிய ஸ்டீபன் பனான் தெரிவிக்கும் போது, “ட்ரம்ப் வெற்றியினால் ஊடகங்கள் சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளன, சிலநாட்களுக்கு ஊடகங்கள் தங்கள் வாயை அடைத்துக் கொண்டு என்ன நடக்கிறது என்பதை அமைதியாக கவனிக்கட்டும்.
ஊடகங்கள்தான் எதிர்கட்சி. அவர்களுக்கு இந்த நாடு புரிபடவில்லை. ஊடகங்களுக்கு இன்னமுமே கூட ட்ரம்ப் ஏன் அதிபரானார் என்று புரியவில்லை.
உயர்மட்ட ஊடகங்கள் ட்ரம்பின் வெற்றியை முற்றிலும் தவறாக புரிந்து கொண்டுள்ளன. 100% முற்றிலும் தவறு. ஊடகங்களிடம் நேர்மை முற்றிலும் இல்லை, புத்தி கூர்மையும் இல்லை. கடின உழைப்பும் இல்லை. நீங்களே எதிர்க்கட்சிகள், ஜனநாயகக் கட்சி அல்ல” என்று கடுமையாக கூறியுள்ளார்.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பாக ஊடகங்கள் பற்றி கூறும் போது, “உலகிலேயே நேர்மையற்றவர்கள் என்றால் அது பத்திரிகை உலகம்தான்” என்றார். இதனையடுத்து தற்போது அவருக்கு நெருங்கிய சகா இவ்வாறு ஊடகங்களை ‘வாயை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
புதிய நிர்வாகத்தின் ஆட்சித் திறனை ஊடகங்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் எண்ணத்துடனேயே, நோக்கத்துடனேயே ட்ரம்ப் நிர்வாகம் ஆட்சிக்கட்டிலில் அமரும் முன்பிருந்தே கூட ஊடகங்களை கடுமையாக விமர்சனம் செய்வதாக இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
0 comments:
Post a Comment