இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா இன்று வியாழக்கிழமை(26) யாழ்ப்பாணத்திலுள்ள யாழ்.இந்தியத் துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் இந்தியாவின் தேசியக் கோடியை யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஏற்றி வைத்ததுடன் இந்தியாவின் தேசிய கீதமும் இதன் போது இசைக்கப்பட்டது.
தொடர்ந்து கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாணவ, மாணவிகள், வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி மாணவிகள் ஆகியோரின் கண்கவர் கோலாட்டம், பார்வையற்ற முல்லைத்தீவு தேவிபுரம் இனிய வாழ்வு இல்ல மாணவ மாணவிகளின் குழுப்பாடலுடன் கூடிய குழுநடனம், வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்களின் காவடியாட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.
68 ஆவது இந்தியக் குடியரசு தினத்தின் விசேட நிகழ்வாக தமிழகத்தின் எட்டயபுரத்து ஏந்தல் மக்கள் புலவன் மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் பிரபல கர்நாடக சங்கீத வித்துவான் ராஜ்குமார் பாரதியின் விசேட உரை இடம்பெற்றது.
விழாவில் யாழ்.இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள், கல்வியியலாளர்கள், கலைஞர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment