//]]>

Thursday, January 26, 2017

வவுனியாவில் கொட்டும் மழையிலும் தொடரும் உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டம் (Photos)


வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று 26.01.2017 நான்காவது நாளாக தொடர்ந்தும் சாகும்  வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகள் தொடர்பில்  அரசாங்கம் பதிலேதும் கூறாமல் காலத்தை இழுத்தடித்துச் செல்வதைக் கண்டித்தும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக் கோரியும், இது  குறித்து உடன் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கமே மேற்படி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு பல்வேறு சிவில், சமூக அமைப்புக்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றன.
 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளின்  புகைப்படங்களை கைகளில் தாங்கி, கண்ணீருடன் இப்போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
   
வவுனியா பிரதம தபால் அலுவலகத்துக்கு எதிரே A - 9 பிரதான வீதியின் அருகே 60 அடி நீளமான பந்தலில் கடும் குளிர், மழைக்கும் மத்தியில் போராட்டம் தொடர்வதால் பலரின் உடல்நிலை  கவலைக்கிடமாக உள்ளது. அதில் நால்வரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.  உணவு மட்டுமல்ல, தண்ணீர் கூட குடிக்காது அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் உடல்நிலை வேகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு  முதல் இரு நாட்களையும் விட மூன்றாம், நான்காம் நாட்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை ஆகிய தமிழர் பிரதேசங்களில் இருந்து சிவில் சமூக அமைப்புக்கள், நிறுவன பிரதிநிதிகள், அரசியல்கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் தன்னெழுச்சியுடன் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவித்தததாவது, 

போர் முடிந்து 8 ஆண்டுகள் கடந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகள் எங்கே எனத் தெரியாமல் நித்தமும் தவித்து வருகின்றோம். எங்களின் பிள்ளைகள் இன்னும் எங்கோ ஒரு மூலையில் உயிருடன் உள்ளார்கள் என்கிற நினைப்பில் தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம். எங்களின் பிள்ளைகளை கடத்தி காணாமல் போகச் செய்துவிட்டு எங்களுக்கு அதன் உண்மைத் தன்மையை தெரிய விடாமல் இன்று வரை இலங்கை அரசு தடுத்து வருகிறது. எங்களது தமிழ் அரசியல்வாதிகளிடமும் இது தொடர்பில் பல தடவை முறையிட்டு விட்டோம். இதனால் நாங்கள் பொறுமை இழந்து விட்டோம். எங்களின் பிள்ளைகள் உயிரோடு திரும்பாவிடின் நாங்களும் இந்த இடத்திலேயே மரணித்துவிடுகிறோம். இது உறுதி. என அவர்கள் கண்ணீருடன் கருத்து தெரிவித்துள்ளனர்.  

வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து  பேரணி ஒன்றினை நடாத்தி     இருந்தனர்.

மன்னாரில் இருந்தும் சிவில் அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் அதிகளவில் பஸ்களில் வந்திருந்தனர்.
கொட்டும் மழையிலும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரதப் போராட்ட மேடையை சூழ நிற்கின்றனர். ஆதரவு தெரிவித்து ஏராளமான பல்கலைக்கழக மாணவர்களும் அப்பகுதியில் சூழ்ந்துள்ளனர்.

இலங்கையின் சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் மேற்படி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.    

அதே போல் வவுனியா போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் முருகன் ஆலய வளாகத்திலும் இன்று காலையில் இருந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உரிய தீர்வு கிடைக்கும் வரை உறுதியுடன் போராடுவது என்று முடிவெடுத்த பின்னரே இப்போராட்டத்தில் குதித்துள்ளதாகவும், இதற்கொரு தீர்வு காணாமல் இங்கிருந்து அகலப் போவதில்லை எனவும்
 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்  கூறினர்.











 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment