யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக் கழக மருத்துவபீடத்திற்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமையுடன் 11 ஆவது நாளை எட்டியுள்ளது.
SAITAM எனும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குப் புதிய மாணவர்களை உள்ளீர்ப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், இலங்கையிலே மருத்துவக் கல்வியையும், சுகாதாரத்தையும் ஒழுங்குபடுத்தும் அமைப்பான SLMS தொடர்ச்சியாகத் தனது சுயாதீனத் தன்மையுடனும், பூரண அதிகாரத்துடனும் இயங்க வேண்டும், SAITAM எனும் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஏற்கனவே படித்த, படித்துக் கொண்டிருக்கின்ற மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு SLMS பொருத்தமான தீர்வை முன்வைக்க வேண்டும், இலங்கையிலுள்ள அனைத்து மக்களினதும் நன்மை கருதி SAITAM எனும் தனியார் மருத்துவக் கல்லூரியையும், அதனுடன் இணைந்த தனியார் போதனா வைத்தியசாலையையும் அரசுடைமையாக்கி அதன் ஊடாக மிக அதிகமான மாணவர்கள் இலவசக் கல்வியூடாகக் கல்வி கற்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ மாணவிகள் "கல்வி, சுகாதாரத்தை விற்பனை செய்வதற்கு எதிராக அணி திரள்வோம்!!", "இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் ஒழிக்கும் முயற்சியைத் தோற்கடிப்போம்!", "SAITAM ஐ தடை செய்!" உள்ளிட்ட பல்வேறு பதாதைகளைத் தாங்கியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மாலை-04 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மருத்துவ பீட மாணவர்களின் போராட்டத்திற்குத் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளார்.
நாளை 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில் காலை-08 மணியளவில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணியொன்று மருத்துவபீடம் முன்பாக ஆரம்பமாகி யாழ். மாவட்டச் செயலகத்தைச் சென்றடையவுள்ளது. அங்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து ஜனாதிபதிக்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளிக்கவும் மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் நான்காம் வருட மாணவனான ஜெயம் மாருதன் தாம் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்பிலும், தமது கோரிக்கைகள் தொடர்பிலும் எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களாகிய நாமும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
எமது கோரிக்கைகள் இலங்கையிலுள்ள ஏழு மருத்துவக் கல்லூரிகளுடனும் இணைந்து விடுக்கப்படுமொரு பொதுவான கோரிக்கையாகும். எமது கோரிக்கைகளுக்கு இதுவரை உத்தியோகபூர்வமான பதில்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
மருத்துவபீட மாணவர்களாகிய நாம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏனைய பீட மாணவர்கள், எங்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள ஏனைய பீட மாணவர்கள், தொழிற்சங்கங்கள், பொதுநிறுவனங்கள் ஆகியோர் ஒன்றிணைந்து பல்கலைக் கழக மருத்துவபீடத்திலிருந்து யாழ்.மாவட்டச் செயலகம் வரை விழிப்புணர்வுப் பேரணியொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ளோம். எங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அரசாங்க அதிபரூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இன்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எங்களுடன் கலந்துரையாடி எங்களுடைய போராட்டம் நியாயமானது எனத் தெரிவித்ததுடன் எமது போராட்டத்திற்குத் தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
நாங்கள் முற்றுமுழுதாக எமது பல்கலைக் கழக மற்றும் வைத்தியசாலைக் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தி கவனயீர்ப்புப் போராட்டத்தையும், எமது போராட்டம் தொடர்பாகப் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறோம். எமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.
யாழ். பல்கலைக்கழக மூன்றாம் வருட மருத்துவபீட மாணவனான யோ. அன்ரூ எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
SAITAM எனும் தனியார் மருத்துவக் கல்லூரி அங்கீகரிக்கப்படுமானால் எமது சமூதாயத்தில் ஏற்படும் பிறழ்வுகள், இதன் காரணமாக இலவசக் கல்விக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள், இலவச மருத்துவத் துறைக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் , மருத்துவப் பணியில் ஈடுபடுகின்ற மருத்துவர்களின் தர வீழ்ச்சி, இதனால் எங்கள் சமூகத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் என்பன தொடர்பில் யாழ்.மாவட்டத்தில் பல்வேறு சமூக மட்டங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளாக மேற்கொண்டு வருகிறோம்.
இதன் ஒரு அங்கமாகப் பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள், கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் ஆகியவற்றிலும், சாதாரண பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். எமது விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாகச் சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினரும் சமூகத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை உணர்ந்து எமக்குத் தங்களுடைய ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளனர் என்றார்.
இதேவேளை, தொடர்ச்சியான போராட்டம் காரணமாக சோர்வுடன் காணப்படும் மருத்துவபீட மாணவர்களை இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது அரச உயரதிகாரிகளோ சென்று பார்வையிடவில்லை எனவும் மாணவர்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment