இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல் கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர் பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை மையப் படுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு மேலதிகமாக கால அவகாசம் வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்மர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடத்தில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி புதிய ஆட்சி ஏற்பட்டதன் பின்னர் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து கலப்புமுறையிலான விசாரணை செய்யப்பட்டவேண்டும் என வலியுறுத்தி அமெரிக்கா பிரேரணை கொண்டு வந்திருந்தது.
இத்தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றியிருந்ததோடு புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் எனவும் சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கியிருந்தது.
எனினும் வாக்குறுதி வழங்கப்பட்டு 18 மாதங்கள் கடந்த நிலையில் அப்பரிந்துரைகள் அடங்கிய தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் 18 மாதங்கள் கால அவகாசத்தை தேவையாகவுள்ளது என்ற கோரிக்கையை நிறைவேற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் பலமுனைகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இத்தகையதொரு சூழலில் இலங்கை அரசாங்கத்தின் கால அவகாசக்கோரிக்கையை நிராகரித்து அவர்களுக்கான கால அவகாசம் மேலும் வழங்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், கவீந்திரன் கோடீஸ்வரன், தருமலிங்கம் சித்தார்த்தன், எஸ்.வியாழேந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகிய எண்மரும் கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் அலுவலகத்திற்கு கோரிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டுடன்கூடிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளும், முறைப்பாடுகளும் வருமாறு,
கோரிக்கை
இலங்கை அரசாங்கத்துக்கு இதுவரைக்காலமும் வழங்கப்பட்ட காலத்தை மேலும் நீடிப்பதற்கான அவகாசத்தை வழங்க கூடாது. இவ்வருடம் மார்ச் மாதத்துடன் ஐ. நா.வினால் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது மேலுமொரு காலநீடிப்பை வழங்குவது பொருத்தமாக இருக்காது.
ஐ.நா.மனித உரிமை பேரவையினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முறையாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். சர்வதே குற்றவியல் நீதிமன்றம், ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களின் கரிசனை தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமாகும்.
இலங்கை அரசாங்கம் இதுவரையிலும் தமிழ் மக்களின் உரிமைக்காக காத்திரமான விடயங்கள் எவையும் செய்யாதிருக்கும் போது மேலுமொரு காலநீடிப்பு வழங்குவது தமிழ் மக்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கிவிடும் . இதுவரைக்காலமும் வழங்கப்பட்ட அவகாசத்தில் எவ்வித முன்னேற்றகரமான விடயங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசாங்கத்திடம் முறையான அரசியல் நிலைப்பாடொன்று இல்லை என்பது தெளிவாகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினர்கள் பலரும் ஐக்கிய நாடுகளினால் பரிந்துரைக்கபட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாதெனவும் இந்த பரிந்துரைகளை ஏற்க மாட்டோம் எனவும் பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.
இலங்கைக்கு கால நீடிப்பு வழங்கப்படுமானால் அது யுத்தக்குற்றம் பாலியல் குற்றங்களை செய்யும் பிற நாடுகளுக்கு இலங்கையை முன்னுதாரணமாகவும் இதுவே ஊக்கத்தையும் வழங்கிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றுள்ளது. (நன்றி: வீரகேசரி -27.02.2017)
0 comments:
Post a Comment