வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய 'ஏ விளம்பி' தமிழ் சித்திரைப் புத்தாண்டு உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(14) அதிகாலை முதல் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இன்று அதிகாலை விசேட அபிஷேக பூசைகளுடன் சித்திரைப் புத்தாண்டு உற்சவம் ஆரம்பமாகியது. இந்த வருடச் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கப் படி உதயமான அதிகாலை-12.48 மணியளவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் வேற்பெரு மானுக்கு விசேட தீபாராதனைகள் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து அதிகாலை-05 மணிக்கு ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் எம்பெருமானுக்குப் பொங்கல் வழிபாடு சிறப்பாக இடம்பெற்றது. தொடர்ந்து ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது.
சித்திரைப் புத்தாண்டு உற்சவத்தை முன்னிட்டு அடியவர்கள் பாற் காவடிகள் எடுத்தும், பஜனைப் பாடல்கள் பாடியும் சந்நிதி வேற்பெருமானை மெய்யன்புடன் வழிபட்டனர். அத்துடன் ஆலயத்தின் புனித தீர்த்தமாகக் காணப்படும் தொண்டைமானாறு ஆற்றில் நூற்றுக் கணக்கான அடியவர்கள் நீராடித் தமது பாவங்கள், வினைகள் என்பன தீர வேண்டித் துதி செய்தனர்.
சித்திரைப் புத்தாண்டு விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் இன்று மதியம் வரை ஆயிரக்கணக்கான அடியவர்கள் புத்தாடைகள் அணிந்து ஆலயத்திற்கு வருகை தந்த வண்ணமிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
0 comments:
Post a Comment