//]]>

Saturday, April 15, 2017

வடை விற்ற முதலமைச்சர் எவ்வாறு ஏழு மாடி ஹோட்டல் கட்டுகிறார்?


''ஓடும் ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக் கட்டுகிறார்?'' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி   கொழும்பு ஊடகம் ஒன்றிடம் எழுப்பிய கேள்விக்கு '' நான் ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலையல்ல, பத்து மாடிகள் கொண்ட ஹோட்டலையே கட்டுகிறேன்!'' என்று முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

ஏட்டிக்குப் போட்டியான இந்த அரசியல்வாதிகளின்  குற்றச்சாட்டும் பதிலும் இலங்கை அரசியல் அரங்கில் தற்போது நிலவும் சித்திரை வெயிலை விட மிக அதிகமான சூட்டுடன் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் விபரம் வருமாறு:

''ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக் கட்டுகிறார்? இதற்கான பணம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? சாமர சம்பத் இந்தப் பணத்தை வீட்டிலிருந்து கொண்டு வந்தாரா?
ரயிலில் வடை விற்று, பாக்கு விற்று ஹோட்டல் அமைக்க முடியும் என்றால் அது மிகவும் ஆச்சரியமானது.

ஹோட்டல் கட்டுவதற்குப் பயன்படுத்தும் பணம் பொதுமக்களினுடையது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த ஊழல் மோசடி குறித்து தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியை சந்தித்து நான் கூறியிருந்தேன். எனினும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எல்ல பிரதேசத்தில் அமைக்கும் அந்த  ஹோட்டலில் 42 அறைகள் காணப்படுகின்றன. இதுபற்றி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் நான்  முறைப்பாடு செய்ய உள்ளேன்.'' என பாராளுமன்ற உறுப்பினர்  சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் சாமர சம்பத் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

''ஆம் நான் ஹோட்டல் ஒன்றை அமைக்கின்றேன். ஆனால்  அது ஏழு மாடிகளைக் கொண்டதல்ல. பத்து மாடிகளைக் கொண்டது.

நான் எவ்வாறு ஹோட்டல் கட்டுகிறேன் என்று வங்கிகளிடம் கேட்டறிந்து கொள்ள முடியும். ஹோட்டல் அமைப்பதற்கு வங்கிக் கடன்கள் பெற்றுக்கொண்டுள்ளேன். மேலும் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த ஹோட்டல் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஹோட்டல் அமைப்பதற்கு வங்கி கடன் வழங்கியது.

நான் வடை விற்றது உண்மைதான். எனினும் என் மீது குற்றம் சுமத்தும் சமிந்த விஜேசிறியின் தந்தை மீன் விற்பனை செய்தார்.

83 கலவரத்தின் போது கண்டு பிடிக்க முடியாமல் இருந்தவர்களுக்கு எவ்வாறு ஹோட்டல்களும் சொத்துக்களும் இருக்க முடியும்? மற்றும் அவருக்கு பதுளையில் கோடிக் கணக்கான பெறுமதியுடைய கடையொன்று இருக்கிறது. அவர் எவ்வாறு சொத்துக்களை குவித்தார் என்பதனை முதலில் அம்பலப்படுத்தட்டும்!''


நல்ல நாடுதான் நமது நாடு, போங்கோ!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment