சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரொருவர் மாணவி வித்தியாவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சுவிஸ் குமாரைத் தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகச் சாட்சியமளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார். சிரே ஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீதான விசாரணையின் பின்னரே சுவிஸ் குமாரைத் தப்பிச்செல்ல உத்தரவிட்டமைக்கு அரசியல் வாதிகளுடைய வேண்டுகோள் தான் காரணமா? என்ற விடயம் வெளிச்சத்திற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகவே, இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக அல்லது வித்தியா கொலைவழக்கைத் திசை திருப்ப வேண்டுமென்பதற்காகக் கூலிப்படையினரை அல்லது பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களை அல்லது ஆயுதம் கையாளுவதில் அனுபவம் பெற்றவர்களைக் கொண்டு இளஞ்செழியன் மீது தாக்குதல் நடாத்தியிருக்கக் கூடும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றுத் திங்கட்கிழமை(24) பிற்பகல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரொருவர் மாணவி வித்தியாவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சுவிஸ் குமாரைத் தப்பிச் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகச் சாட்சியமளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்.நாளைய தினம்(இன்று) அவர் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். அவர் நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதை ஒட்டிப் பல்வேறு பொலிஸ் நிலையங்களிலிருந்தும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் திரட்டப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பந்தப்பட்ட சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்காக குறித்த வழக்கு விசாரணையின் போது வாதிடுவதற்காக இலங்கையிலுள்ள பொலிஸ் நிலையங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து தலா- 25 ஆயிரம் ரூபா திரட்டப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்காக நீங்கள் நிதி திரட்டப் போகின்றீர்கள் என்றால் இதன் பின்னணி என்ன?.
பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காகப் பல பொலிஸ் குழுக்களைக் களத்தில் இறக்கும் பொலிஸ் துறை நீதிபதி மா. நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையிலும் பொலிஸ் குழுக்களைக் களத்தில் இறக்கி விசாரணை நடாத்தாமலிருப்பது ஏன்?
நீதி விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வந்த மேல் நீதிமன்ற நீதிபதி என்ற வகையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நீதித் துறை சுதந்திரம் எந்தளவிற்குள்ளது என்ற கேள்வியை எழுப்புவதாகவும் இந்தச் சம்பவமுள்ளது.
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் நாங்கள் பாதுகாப்பைப் பலப்படுத்துகின்றோம். வேறு பல விடயங்களைச் செய்கின்றோம் எனக் கருத்துக்கள் கூறுவதை விடுத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
ஆகவே, நீதியான விசாரணைகள் மூலம் உண்மைகள் கண்டறியப்பட்டு இந்தச் சம்பவத்தின் பின்னாலுள்ள உண்மையான பின்னணிகளை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment