//]]>

Monday, August 7, 2017

விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டவில்லை!- வல்வெட்டித்துறையில் முதலமைச்சர் விளக்கம்

வடக்கிலும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தாம் கூறியது முன்னாள் போராளிகளை அல்ல என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இன்று மனிதர்கள் மந்தைகளுக்கு ஒப்பாக வெட்டிச் சாய்க்கப்படுகின்றார்கள். வன்மமும் வன்முறையும் சிலரிடம் தலைக்கேறி விட்டது. போதைப்பொருட்கள் அதற்கு புத்துயிர் அளிக்கின்றன.
நான் அண்மைக்காலங்களில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றம் இழைப்பது சம்பந்தமாகப் பேசப் போய், எமது விடுதலை வீரர்களை நான் குறிப்பிட்டதாக மூத்த அரசியல்வாதிகள் கூட தமது கருத்துக்களை பிழையாக வெளியிட்டமை கவலைக்குரியது.
நான் புலிகள் இயக்கப் போராளிகள் பற்றிக் குறிப்பிடவில்லை. விடுதலைப் புலிகள் என்ற சொல்லே என்னால் பாவிக்கப்படவில்லை.
போர்ப் பயிற்சி பெற்று அரச படைகளுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டோரே என் கண்டனத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள்.
காரணமில்லாமல் முன்னைய போராளிகளை காவல்துறையினர் கைது செய்வதையும் நாம் கண்டிக்கின்றோம். பயிற்சிகள் பெற்று விட்டு பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களையும் நாம் கண்டிக்கின்றோம்.
மேற்படி வன்முறைகளினால் அப்பாவி வயோதிபர்களும் குடும்பங்களும் உடல் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து நடைப்பிணங்களாக மாறியிருப்பதை எத்தனை இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்?
அவர்களின் சிந்தனைகளில் மாற்றம் வரவேண்டும். இளைஞர்கள் சற்று அழமாகச் சிந்திக்கத் தொடங்கினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகிட்டும்.
இன்றைய குற்றச் செயல்களுக்கு பல பெற்றோர்களும் காரணமாகிவிடுகின்றார்கள். தமது பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், எவருடன் பழகுகிறார்கள் என்பதை அவர்கள் கண்டறிவதில்லை.
நடுச்சாமத்தில், விடியற்காலையில் தமது பிள்ளைகள் கொண்டு வருகின்ற பணம், நகை நட்டு ஆகியவற்றை எங்கிருந்து எடுத்து வந்தார்கள் என்பதை அறியமுற்படுவதில்லை.
இத் தேட்டங்கள் முறையாக தேடப்பட்டனவா அல்லது முறைதவறிய தேட்டமா? இவ்வாறான கேள்விகள் எத்தனை பெற்றோர்களின் மனதில் உதித்திருக்கின்றன?
இவற்றுக்கெல்லாம் விடை காணப்படவேண்டுமாயின் சமுதாயம் விழிப்புணர்வு பெறவேண்டும். சமூக ஒற்றுமை மேலோங்க வேண்டும்.
எம்மைப்போல் பிறரையும் நேசிக்கும் தன்மை வளரவேண்டும். போதுமென்ற மனத்துடன் வருவாய்க்கேற்ப வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான்  வன்முறைகளுக்கும் முறையற்ற பொருள் தேடல்களுக்கும் முடிவு காலம் வரும். அதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment