கடந்த- 24 ஆம் திகதி ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கித் தீர்ப்பளித்துள்ளது. யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னர் கடந்த ஏழு ஆண்டுகளில் விடுதலைப்புலிகள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான சான்றாதாரங்களும் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டு இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் தடை சில தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தடைகள் நீடிக்கப்பட்டமையும் வெறும் அறிக்கைகளை மாத்திரம் அடிப்படையாக வைத்துத் தான் நீடிக்கப்பட்டதே தவிர இக்காலப் பகுதிக்குள் தமீழீழ விடுதலைப் புலிகள் வன்முறைகளில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான சான்றாதாரங்களுமில்லை என நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது தொடர்பில் இழுபறி நிலையிலுள்ளது. ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு அரசியல் ரீதியானதாகவேயுள்ளது. இந்த நிலையில் அரசியல் ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கச் செய்வதற்கான ஒரு உபாயமாக இலங்கை அரசாங்கம் அண்மைய நாட்களில் வன்முறைகளை
யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. வன்முறைச் செயற்பாடுகளில் முன்னாள் போராளிகளைச் சம்பந்தப்படுத்துவதன் மூலம் விடுதலைப் புலிகள் இன்னமும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது தான் இந்தச் செயற்பாட்டின் முக்கிய பின்புலம் எனத் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இலங்கையின் பொலிஸ்மா அதிபர் யாழ்.குடாநாட்டில் இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விபரித்துள்ளதுடன் அந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முப்படைகளையும் பயன்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். எங்களைப் பொறுத்தவரை குற்றச்செயல்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
வாள்வெட்டுச் சம்பவங்கள், மணல் கடத்தல், கஞ்சா கடத்தல் உட்படப் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து மக்களுடைய வாழ்வியலைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. அந்தச் சம்பவங்கள் அனைத்தும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அது தான் எங்களுடைய மக்களின் எதிர்பார்ப்பாகவுமுள்ளது.
ஆனால், இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் போர்வையில் முப்படையினரையும் ஈடுபடுத்துவது எங்கள் மக்கள் மட்டத்தில் மிகுந்த அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முப்படையினர் என்று சொல்லும் போது கடந்த முப்பது ஆண்டு காலப் போராட்ட காலப் பகுதியில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்மக்கள் மீது படைகள் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகள் தான் உடன் ஞாபகத்துக்கு வரும். கடந்த-2009 ஆம் ஆண்டு மேமாதம் யுத்தம் நிறைவுக்கு வந்த போது மிகக் கொடூரமான இனவழிப்பை எந்தவித ஈவிரக்கமுமில்லாமல் முப்படைகளே மேற்கொண்டன.
இந்த இனவழிப்பின் போது இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளும் நேர்கொண்ட குற்றங்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டும் வருகிறது. இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள முப்படைகளைத் தமிழ்மக்கள் மத்தியில் உருவாகியுள்ள வன்முறைகளைக் கட்டுப்படுத்தல் எனும் பேரில் பயன்படுத்துவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயுத முனையில் அல்லது வன்முறை முனையில் தமிழ்மக்களைத் தொடர்ந்தும் கையாள்வதற்கான உபாயமாக இதனைக் கருத வேண்டியுள்ளது.
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்திப் பொலிஸ்மா அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறு தொடர்புபடுத்துவதில் ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே நாங்கள் சந்தேகிக்கின்றோம்.
தென்னிலங்கையில் பல்வேறுபட்ட குற்றச் செயல்கள் அன்றாடம் இடம்பெறுகின்றன. மிகப் பயங்கரமான பாதாளக் குழுக்கள் தென்னிலங்கையில் செயற்பட்டு வருகின்றன. கடந்த ஒரு சில மாதத்திற்கு முன்னர் தென்னிலங்கையில் ஒரு நீதிமன்றத்திற்குச் சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த கைதிகளை ஏற்றிய வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டுமுள்ளனர். ஆனால், தென்னிலங்கையில் எந்தவொரு சூழ்நிலையிலும் இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டதில்லை.
இதற்கு முன்னரிருந்ததை விடவும் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளவும் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இது தொடர்பான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் பகுதியில் கோப்பாய்ப் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள இரு இளைஞர்களும் முன்னாள் போராளிகள் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கிறார். ஆனால், குறித்த இளைஞர்களில் ஒருவருக்காக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சுகாஸ் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள இரு இளைஞர்களில் எவருமே முன்னாள் போராளியல்ல எனத் தெரிவித்திருக்கிறார். அவ்வாறாயின் பொலிஸ்மா அதிபர் பொய் கூறியிருக்கின்றார் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment